×

தமிழகம் முழுவதும் அட்சயதிருதியை முன்னிட்டு நகைக்கடைகள் இன்று அதிகாலையில் திறப்பு: ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு; கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விற்பனைக்கு வாய்ப்பு

சென்னை: அட்சயதிருதியை காரணமாக தமிழகம் முழுவதும் நகைக்கடைகளை இன்று அதிகாலையிலேயே திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இதன்படி இந்தாண்டு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.17 மணிக்கு அட்சய திருதியை திதி தொடங்கி நாளை (சனிக்கிழமை) மதியம் 2.50 மணிக்கு முடிகிறது. உதயதிதியின் அடிப்படையில் இன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இது அட்சய திரிதியையின் சரியான தேதியாகும். எனவே இன்றும் நாளையும், அதிகாலை 5.33 மணி முதல் மதியம் 12.18 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரமாகும்.

இந்த நேரத்தில் வாங்கினால், வருடம் முழுவதும் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் கிடைப்பது உறுதி என கணிக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்தாண்டு அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அட்வான்ஸ் புக்கிங்கை கடந்த 15 நாட்களுக்கு முன்பே தொடங்கியது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

அதாவது, குறைந்தபட்சம் 25 சதவீதம் முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை புக்கிங் செய்யலாம். தங்க நகைகள் சவரனுக்கு ரூ.1000 குறைவு, வைர நகைகள் கேரட்டுக்கு ரூ.15,000 வரை குறைவு, வெள்ளி பொருட்கள் கிலோவுக்கு ரூ.3000 வரை குறைவு, தங்க நாணயங்களுக்கு ஜீரோ சதவீதம் சேதாரம். பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றி கொள்ளலாம். முன்பதிவு செய்பவர்கள் அட்சயதிருதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் அந்த குறைந்த விலையிலும், அதிகமாக இருந்தால் முன்பதிவு செய்த விலையிலும் தங்க நகைகளை வாங்கி செல்லலாம் என்றும் அறிவித்திருந்தனர். இதனால், ஏராளமானோர் அட்சயதிருதியை அன்று நகை வாங்க புக்கிங் செய்துள்ளனர். அதே நேரத்தில் இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் அட்சயதிருதியை கொண்டாட நகைக்கடைக்கார்கள் முடிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக நகைக்கடைகள் முன்பாக மனதை கவரும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அட்சயதிருதியையான 10ம் தேதி (இன்று) காலையிலேயே (6 மணியளவில்) கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை கடைகள் திறந்திருக்கும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய டிசைன்கள் வந்துள்ளன. புதிய வைர நகை டிசைன்களும் அதிக அளவில் வந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலால் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் நகைகள் வாங்குவதை தவிர்த்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதன் தாக்கம் அட்சயதிரிதியை அன்று எதிரொலிக்கும்.

இதனால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு நகை விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மிட் நைட்டில் நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று விட வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடைகளில் கூடுதலாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு அட்சயதிருதியை அன்று 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையானது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்துக்கு மேல் சென்ற விலை தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனால் நகை விற்பனை அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் நம்புகின்றனர்.

The post தமிழகம் முழுவதும் அட்சயதிருதியை முன்னிட்டு நகைக்கடைகள் இன்று அதிகாலையில் திறப்பு: ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு; கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விற்பனைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Aksayatrithi ,CHENNAI ,Akshaya Thiridhi ,Akshaya ,Trithiiyai ,Akshayatridhi ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...