×

இன்ஸ்டாகிராமில் நேரலை செய்து கள்ள ஓட்டு குஜராத் பூத்தில் நடந்த தேர்தல் செல்லாது: தேர்தல் ஆணையம் நடவடிக்கை


* 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
* நாளை மீண்டும் மறுவாக்குப்பதிவு

அகமதாபாத்: குஜராத்தில் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்து கள்ள ஓட்டு போட்ட பூத்தில் நடந்த தேர்தல் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அங்கு நாளை மீண்டும் மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இதுதொடர்பாக 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தாஹோத் தொகுதி சாந்த்ராம்பூர் தாலுகாவில் உள்ள பார்த்தம்பூர் பூத்தில் உள்ள வாக்குசாவடிக்கு விஜய் பபோர் என்ற வாலிபர் வாக்களிக்க சென்றார். வாக்களிப்பதை இன்ஸ்டாகிராமில் அவர் நேரலை செய்துள்ளார். அதில், தான் வாக்களித்ததோடு, வாக்குச்சாவடி அதிகாரிகளை மிரட்டி 2 கள்ளஓட்டு போட்டதையும் அவர் காண்பித்து இருந்தார். அவர் தற்போதைய தாஹோத் தொகுதி எம்பி ஜஸ்வந்த்சிங் பபோரின் மகன் என்று கூறப்பட்டது. அதே சமயம் அவர் பா.ஜ பிரமுகர் ரமேஷ் பபோரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.

ரமேஷ் பபோர் அங்குள்ள சாந்த்ராம்பூர் தாலுகா பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய் பபோர், மனோஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பா.ஜவை சேர்ந்த விஜய் பபோர் கள்ள ஓட்டுப்போட்டதை இன்ஸ்டாகிராமில் நேரலை செய்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மே 11ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தலைமை அதிகாரி, உதவி தலைமை அதிகாரி மற்றும் இரண்டு தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவிஎம் எந்திரம் எங்கள் தந்தைக்கு சொந்தமானது
குஜராத்தில் தஹோத் மக்களவை தொகுதியில் கள்ள ஓட்டு போட்டு அதை நேரலை செய்த விஜய் பபோர் (28) அவரது லைவ் வீடியோவில், ‘எங்களுக்கு 10 நிமிடம் கொடுங்கள், நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம். வாக்கெடுப்பு காலையிலிருந்து நடந்து வருகிறது. அது அப்படி வேலை செய்யக்கூடாது. பாஜவால் தான் எல்லாம் முடியும். இந்த இவிஎம்எந்திரம் எங்கள் தந்தைக்கு சொந்தமானது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மபியிலும் ஓட்டுப்பதிவை கேலிக்கூத்தாக்கிய பா.ஜ: மகனை அழைத்துச்சென்று வாக்களிக்க வைத்த அவலம்


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மே 7ம் தேதி வாக்குச்சாவடிக்கு தனது மகனை அழைத்துச் சென்ற பாஜ கவுன்சிலர் ஒருவர் அங்கு மகனை ஓட்டுப்போட வைத்த கேலிக்கூத்து நடந்துள்ளது. இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் போபால் பெராசியா வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் குறித்து போபால் கலெக்டர் கவுசலேந்திர விக்ரம் சிங் விசாரணை நடத்தி வாக்குச்சாவடி எண் 71 (கித்வாஸ்) பூத் அதிகாரி சந்தீப் சைனியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் மகனை ஓட்டுப்போட வைத்த பாஜ மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் விஜய் மெஹர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post இன்ஸ்டாகிராமில் நேரலை செய்து கள்ள ஓட்டு குஜராத் பூத்தில் நடந்த தேர்தல் செல்லாது: தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Instagram ,Gujarat ,Election Commission ,Ahmedabad ,Dinakaran ,
× RELATED கள்ள ஓட்டு போட்டதை இன்ஸ்டாவில் நேரலை :...