சென்னை: ஆன்லைன் ஆப் மூலம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்று கட்ட முடியாததால், கடன் கொடுத்த நிறுவனம் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டியதால் பாஜ பிரமுகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை புதுப்பேட்டை நாகப்பன் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவர் இந்து முன்னணி மற்றும் பாஜ உறுப்பினராக இருந்தார்.
திருமணம் ஆகாத கோபி நாத் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.50 ஆயிரம் கோபிநாத் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை சரியாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்த ஆன்லைன் லோன் ஆப் நிறுவனத்தினர், கோபிநாத்தின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோபிநாத் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இன்று காலை 7.45 மணிக்கு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், ‘நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ என்ற பதிவு செய்துவிட்டு, வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் அவரது தாய் தனலட்சுமியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபிநாத் நண்பர்கள் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து அவரது தாய் தனலட்சுமியிடம், கோபிநாத் எங்கே என்று கேட்ட பிறகு தான், அவர் தற்கொலை செய்து கொண்ட விபரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அதைதொடர்ந்து தற்கொலை குறித்து கோபிநாத் தாய் தனலட்சுமி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் வரைந்து வந்து கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், கோபிநாத் பயன்படுத்திய செல்போனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கடன் செயலி மூலம் வாங்கிய பணத்தை செலுத்திய பிறகும் மிரட்டல்; தற்கொலை செய்து கொண்ட இளைஞர்! appeared first on Dinakaran.