×
Saravana Stores

கிண்டி காந்தி மண்டப வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன : தமிழக அரசு

சென்னை : சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகமானது சுமார் 18.42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தேசத் தலைவர்களின் நினைவிடங்கள் மற்றும் சிலைகள் நிறுவப்பட்டு, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம், பெருந்தலைவர் காமராஜர் சிலை, பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், காந்தி மண்டபம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், தியாகிகள் மணிமண்டபம், இராஜாஜி நினைவிடம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம். மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபம், அண்ணல் காந்தியடிகள் சிலை, தியாகி சங்கரலிங்கனார் சிலை, செண்பகராமன் சிலை, ஆர்யா (எ) பாஷ்யம் சிலை மற்றும் திறந்தவெளி கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காந்தி மண்டப வளாகத்தினை பார்வையிட்டு மணிமண்டபங்களும், தேசத் தலைவர்களின் திருவுருவ சிலைகளும் அமையப் பெற்றுள்ள இந்த வளாகத்தினை மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் இவ்வளாகத்தினை பலமுறை பார்வையிட்டு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்துப் பணிகளை பொதுப்பணித் துறையின் மூலமாக மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 2022-ஆம் நிதியாண்டில் 1 கோடியே 48 இலட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மண்டபங்களைப் புதுப்பித்தல், நடைபாதைகளை மேம்படுத்துதல், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

2022 – 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இவ்வளாகத்தில் ரூ.18.00 இலட்சம் செலவில், வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலையும், ரூ.34.00 இலட்சம் செலவில் மருது சகோதரர்கள் சிலையும், ரூ.43.43 இலட்சம் செலவில் வ.உ.சிதம்பரனார் சிலை மற்றும் செக்கு மண்டபம் சீரமைத்தல், ரூ.17.50 இலட்சம் செலவில் சுப்புராயன் சிலை, ரூ.148.12 இலட்சம் செலவிலும், 2 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் அயோத்திதாச பண்டிதர் புதிய மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது. மேலும், காமராஜர் நினைவிட கட்டடத்தின் முகப்பு சீரமைத்தல், வர்ணம் பூசுதல் மற்றும் இதர சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.காந்தி மண்டப வளாகத்தினை சீரமைக்கும் வகையில், பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்களால் 8.5.2024 அன்று கள ஆய்வு செய்யப்பட்டு, பின்வரும் மேம்பாட்டுப் பணிகளை பொதுப்பணித் துறையின் மூலம் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை தவிர, பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த வளாகத்திற்கு கூடுதலாக குடிநீர் வசதி, சிறப்பு மராமத்துப் பணிகளான சேதமடைந்த நடைபாதை சீரமைத்தல், பூங்காக்களுக்கு தண்ணீர் வசதி, மின் மோட்டார் சீரமைத்தல், வளாகம் முழுவதும் சுத்தம்படுத்தும் பணி, தண்ணீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், புல்வெளி மற்றும் பூங்கா பராமரிப்பு, நுழைவு வாயில் மற்றும் பெயர் பலகைகளை சீரமைத்தல் மற்றும் புதிதாக குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், வெளிப்புற மின் விளக்கு, மின் பெட்டிகள் மற்றும் மின் புதைவழி கேபிள் சீரமைத்தல், புதிய மின் கோபுர விளக்குகள், புதைவழி கேபிள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

The post கிண்டி காந்தி மண்டப வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன : தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Kindi Gandhi ,Hall ,Tamil Nadu Govt. ,Chennai ,Kindi Gandhi Hall Complex ,Gandhi Mandapam complex ,Guindy, Chennai ,Department of News and Public Relations ,Tamil Nadu Government ,
× RELATED பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு...