×
Saravana Stores

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்: டெல்லியில் இருந்து 285 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டது

புதுடெல்லி: ஹஜ் பயணிகளின் புனித பயணம் இன்று தொடங்கியது. முதல் விமானம் அதிகாலையில் டெல்லியில் இருந்து புறப்பட்டது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை ஒன்றிய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 25 லட்சம் முதல் 35 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்குகிறது. உலகில் ஹஜ் புனித பயணத்திற்கு அதிக யாத்திரிகர்களை அனுப்பும் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் பயணிகளை ஏற்றி கொண்டு, இன்று அதிகாலை 2.20 மணியளவில் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. இதுபற்றி டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவர் கவுசர் ஜகான் நிருபர்களிடம் கூறும்போது, ‘விமானத்தில், 285 ஹஜ் பயணிகள் பயணித்தனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இந்தாண்டில் மொத்தம் 16,500 பேர் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்வார்கள்’ என்றார்.

கடந்த 7ம் தேதி ஜெட்டா மற்றும் மதீனா நகரங்களில் நடப்பாண்டிற்கான ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை செயலாளர் முக்தேஷ் கே.பர்தேஷி மறுஆய்வு மேற்கொண்டார். 2024 ஹஜ் ஒதுக்கீட்டின்படி, சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். இதனை ஒன்றிய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

The post ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்: டெல்லியில் இருந்து 285 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Haj pilgrimage ,Delhi ,New Delhi ,Haj pilgrims ,Ministry of Minority Affairs ,Union Health Ministry ,Haj ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...