தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புதிதாக தெரு பெயர் பலகைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணிகள் மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டு, 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 10,11,341 ஆகும். 70 வார்டுகளை உள்ளடக்கிய 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 7,152 சாலைகள் 980 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ளன. மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பெயர் பலகைகள், பழைய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் பெயர்களில் உள்ளது. தாம்பரம் மாநகராட்சி உருவாக்கத்திற்கு பின், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் பெயர் பலகைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றது.
அதன் அடிப்படையில் முன்மொழிவு 15வது மத்திய நிதிக்குழு மான்யம் 2023-24ன் கீழ் ரூ5.57 கோடி மதிப்பீட்டில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, ஜனவரி 2024ல் பணி உத்தரவு வழங்கப்பட்டு, இதற்கான முதற்கட்டமாக பணிகள் துவங்கப்பட்டு நடந்து வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணி காரணமாக 20 சதவீத பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது தேர்தல் பணிகள் முடிவுற்று, தற்போது 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடக்கிறது. மேலும் இப்பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் மாநகராட்சி பகுதி தெருக்களில் புதிய பெயர் பலகைகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.