ஜெயங்கொண்டம் மே9: ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை, கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்காணித்து கைது செய்ய அறிவுறுத்தியதின் பேரில் போலீசார் தீவிரமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் ரகசிய தகவல் கொடுக்கும் படியும். ரகசிய தகவல் கொடுப்பவரின் பெயர் ஊர் மற்றும் ரகசியம் காக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் சிலர் சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதை வஸ்து பொருட்களை காரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான எஸ்ஐ நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான, 400 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், குட்கா பொருட்களை ஏற்றுக் கொண்டு காரை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டம் காலாப்புறா ராஜ் புட்டோ காவாஷ் பகுதியைச் சேர்ந்த ராணா ராம் மகன் நீமாராம்(36), என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோல் பெங்களூர், ராஜஸ்தானில் இருந்து மூட்டைகள் ஜெயங்கொண்டம் வழியாக கடத்தப்படுகின்றதா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஜெயங்கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ3லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல் appeared first on Dinakaran.