×

அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி

திருமயம், மே 9: அரிமளம் அருகே அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நெடுங்குடி கிராமத்தார்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனிடையே நேற்று காலை நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 26 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை தேனி மாவட்டம் தேவாரம் வெண்டி முத்தையா , 2ம் பரிசு கே. புதுப்பட்டி கலை, 3ம் பரிசு கே புதுப்பட்டி அம்பாள், 4ம் பரிசு அரிமளம் சேரிகாத்த அய்யனார் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 17 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசை அயிலாங்குடி மலைச்சாமி, 2ம் பரிசு எஸ்எஸ் கோட்டை முத்துராமன், 3ம் பரிசு பட்டணம் காத்தான் அகிலேஸ்வரன், 4ம் பரிசு கே.புதுப்பட்டி கலை ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு கோப்பையுடன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற நெடுங்குடி- கீழாநிலைக்கோட்டை சாலை இருபுறமும் திரளான மக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி appeared first on Dinakaran.

Tags : Bullock Cart Elkai Race Competition ,Arimalam ,Thirumayam ,elkai race ,Amman Koil Chitrai festival ,Nedungudi Periyanayaki Amman ,Pudukottai ,Bullock cart elk race competition ,Dinakaran ,
× RELATED அரிமளம் அருகே 38 ஜோடி மாட்டு வண்டிகள் எல்கை பந்தயம்