திருச்சி. மே 9: திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் “நான் முதல்வன்’’ திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை தலைமையேற்று தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். திருச்சி மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்து முதலாம் ஆண்டு கல்லூரிக்கு செல்ல விரும்பும் மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயிலுவதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சியானது “நான் முதல்வன்’’ திட்டத்தின்கீழ் நேற்று நடைபெற்றுது. “கல்லூரிக் கனவு” என்ற தலைப்பின்கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 106 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் ஒரு பள்ளிக்கு தலா 10 மாணவ, மாணவிகள் வீதம் 1060 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிக்கனவு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த கல்வியாளர்கள் பங்கேற்று கலை மற்றும் அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில் நுட்பபிரிவுகள் உள்ளிட்ட என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்கள். மேலும் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வீடியோ காட்சிகள், உயர்கல்வியில் சாதித்த மாணவ-மாணவிகளின் அனுபவ பகிர்வு, உயர்கல்வி பயில வங்கிக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலை அறிவியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரி, உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்களும், கல்விகடன் வழங்கும் வங்கிகள் என 50க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, கல்வியாளர்கள் மஞ்சு, டாக்டர் அந்தோணி ஜெரால்டு ஆனந்த், டாக்டர் மணி, டாக்டர் கார்த்திகேயன் (உதவிபேராசிரியர்), டாக்டர் அலெக்ஸ் (இணைபேராசிரியர்), டாக்டர் சதீஸ் (உதவிபேராசிரியர்), கண்ணன் (கூடுதல் திட்ட இயக்குநர் தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுகழகம்), நான் முதல்வன் திட்டமேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரிகளின் பேராசிரியர்கள் கூறுகையில், பெரும்பாலும் பி.காம், பி.எஸ்சி நியூட்டிரிசன் மற்றும் டயடிஸ், பி.எஸ்சி (பேஷன் டெக்னாலஜி) போன்ற படிப்பிற்கான இடங்களுக்கு மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும், அதன்பிறகே மற்ற பாடங்களுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறினார்கள். மேலும் நடப்பு கல்வியாண்டில் பி.எஸ்சி ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ், பி.காம் (பிசினஸ் அனலிட்டிக்ஸ்), பி.காம் (ஹானர்ஸ்), பி.காம் (நிதி புள்ளிவிவரங்கள்), பி.எஸ்சி (உளவியல்), பிஎஸ்டபிள்யு (இளங்கலை சமூகசேவை) உள்ளிட்ட பாடத்திட்டங்கள் தற்போது புதிததாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு பெரும்பாலும் குறைந்தபட்சமாக 400 மதிப்பெண்ணும், அதற்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த புதிய பாடத்திட்டங்களில் படிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் 550 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட பி.ஏ.பொருளாதாரம் பயில ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும்போது தான் என்ன படிக்க போகிறோம் என்பதை தீர்மானித்து கொண்டு தான் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். எனவே கல்லூரிகளில் உள்ள ஒவ்வொரு படிப்பிற்கும் என்று ஒரு வரையறை உள்ளது. அதன்படி ஒரு மாணவன் 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் அதாவது 600க்கு 300 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அவர்களால் உயர்கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும். அதற்கு கீழ் இருந்தால் அவர்களால் உயர்கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றல் அதிகமாகும். எனவே தான் இந்த மதிப்பெண் வரையறையை கல்லூரிகள் பின்பற்றுகிறார்கள். ஒரு வகுப்பில் நன்றாக பயில கூடியவர்களும், நடுத்தரமாக பயிலுபவர்களும், குறைவாக பயிலுபவர்களும் சரிசமமாக இருந்தால் இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடருவார்கள். மேலும் முதலாம் ஆண்டு பயில வரும் மாணவ, மாணவிகளுக்கு எந்தெந்த பாடங்கள் எடுத்தால் என்ன பணி வாய்ப்புகள் நமக்கு இருக்கிறது என்பது குறித்து நாங்கள் சரியான அறிவுரையை கூறி அவர்கள் தங்களுடைய துறை தேர்வு செய்யவும் உதவி செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
The post குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் படிக்க வாய்ப்பு; நடப்பாண்டில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்: மேற்படிப்பு படிக்க மாணவர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.