பழநி, மே 9: தரமான கம்பு பயிர் உற்பத்தி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றது. மண்ணின் கார, அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும். மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் எக்டேருக்கு 3.75 கிலோ விதை தேவைப்படும்.
வறட்சியை தாங்கி வளர பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு அதை நிழலில் உலர்த்தி தன் எடைக்கு உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். 1 எக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணூட்டச் சத்து இட வேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும்போது விதைத்த 3வது நாள் அட்ரசின் 1 எக்டேருக்கு 500 கிராம் வீதம் களைக்கொல்லி மருந்தினை 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அடியுரமாக 50% தழைச்சத்து முழுவதுமாக மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.
மீதமுள்ள 50% தழைச்சத்து உரத்தை நட்ட 15வது நாள் மற்றும் 30வது நாள் பிரித்து மேலுரமாக இட வேண்டும். விதைத்தவுடன் 4வது நாளும் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண்துறை அலுவலர் ஆலோசனையின்படி பயிர் பாதுகாப்பு மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post தரமான கம்பு உற்பத்தி செய்வது எப்படி?.. வேளாண்துறை ஆலோசனை appeared first on Dinakaran.