வேலூர், மே 9: வேலூர் அடுத்த பெருமுகையில் நடந்த கோயில் திருவிழா சுவாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக இரண்டு தரப்பை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த பெருமுகையில் கடந்த 5ம்தேதி இரவு திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. இதைதொடர்ந்து கடந்த 6ம் தேதி இரவு பெருமுகை பஜனை கோயில் தெருவில் இசை நிகழ்ச்சியுடன் சுவாமி ஊர்வலம் நடந்தது. இசை நிகழ்ச்சியை பார்க்க அம்பேத்கர் நகர் பகுதியை இளைஞர்கள் சிலர் சென்றனர். அப்போது அவர்களுக்கும் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் அங்கிருந்த 3 பைக்குகளும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் இரண்டு தரப்பை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கோயில் விழாவை காண சென்ற தங்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி அம்பேத்கர் நகரை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதேபோல் மற்றொரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் தங்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் இருதரப்பினரிடமும் புகார்களை பெற்று வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்பிரிவு போலீசார், இந்த மோதல் தொடர்பாக இரண்டு தரப்பிலும் தலா 5 பேரை பிடித்து விசாரணை நடத்தியதுடன், தகராறு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து பெருமுகையை சேர்ந்த ராஜன்(48), அண்ணாதுரை(52), தரணி(27), கிருபாகரன்(31), விக்னேஷ்(31), புருஷோத்தமன்(44), பெருமுகை அம்பேத்கர் நகரை சேர்ந்த எத்திராஜ்(52), குமரன்(43), பிரவீன்குமார்(35), தினேஷ்குமார்(39), குமரநாதன்(33), சீனு(35) ஆகிய 12 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 12 பேர் கைது வேலூர் அருகே கோயில் திருவிழாவில் appeared first on Dinakaran.