
- லீனா மணிமேகலா
- டெல்லி பொலிஸ்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எங்களுக்கு
- லீனா மணிமேகலை
- காளி
புதுடெல்லி: கடந்தாண்டு ஜூலையில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பெண் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை என்பவர், ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். இந்தப் படத்தில் லீனா மணிமேகலை ‘காளி’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெளியான போஸ்டரில், ‘காளி’ வேடம் தரித்த பெண் ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான எல்ஜிபிடி கொடியையும் அவர் பிடித்துக்கொண்டிருப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இது, இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட எப்ஐஆர்களை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மணிமேகலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பர்டிவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு எதிரான அனைத்து தகவல் அறிக்கைகளையும், டெல்லி காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 173ன் கீழ் விசாரணை அதிகாரியால் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, மேற்கண்ட எப்ஐஆர்களின் அடிப்படையில் மணிமேகலைக்கு எதிராக எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்க கூடாது. பல மாநிலங்களில் எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவர் தனது மீதான எப்ஐஆரை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கையை, அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என்றனர்.