காரைக்குடி, மே 9: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து 25க்கும் மேற்பட்ட இடங்களில் கால்நடைகளுக்கு என தண்ணீர் தொட்டி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி சேர்மன் சாந்தி சிவசங்கர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊர் முழுவதும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் கால்நடைகளுக்கு என தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு சமூக ஆர்வலர்கள் மூலம் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்பகுதியில் 5000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இங்குள்ள 3 கண்மாய்கள் மற்றும் 10 ஊரணியில் பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் கோடை வெயில் காரணமாக தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனை போக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகம், பேரூராட்சி உறுப்பினர்கள் இணைந்து 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் 25 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 25 இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளிலும் சமூக ஆர்வலர்கள் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காத இடங்களில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் நிரப்பப்படும் என்றனர்.
The post கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி appeared first on Dinakaran.