சண்டிகர்: அரியானாவில் மைனாரிட்டி பாஜ அரசை டிஸ்மிஸ் செய்து, புதிதாக தேர்தல் நடத்த வேண்டுமென ஆளுநருக்கு கடிதம் எழுதப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரியானா மாநிலத்தில் பாஜ அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதன் மூலம் 88 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜ கூட்டணியின் பலம் 42 ஆக சரிந்துள்ளது. மைனாரிட்டி அரசான பாஜவின் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜ ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 45 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இதில் பாஜ கூட்டணியில் இருந்து சமீபத்தில் பிரிந்து வந்த ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் ஆதரவு தராத ஐஎன்எல்டி கட்சிக்கு 1 எம்எல்ஏவும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் உள்ளனர். இதற்கிடையே, பாஜ ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டால் அதற்கு முழு ஆதரவு தருவதாக ஜேஜேபி கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா நேற்று அறிவித்துள்ளார்.
* பாஜ அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை
அரியானாவில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி சிர்சாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. சிலரின் தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்றுவது எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது. காங்கிரசின் தவறான செயல்களை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
The post அரியானா அரசியலில் பரபரப்பு மைனாரிட்டி பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் வலியுறுத்த காங். முடிவு appeared first on Dinakaran.