×

ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 80 விமானங்கள் திடீர் ரத்து: கடைசி நிமிடத்தில் கூறியதால் பயணிகள் தவிப்பு

புதுடெல்லி: உடல்நிலை சரியில்லை என ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த 2021ல் டாடா நிறுவனம் வாங்கிய பிறகு, அவ்வப்போது ஊழியர்கள் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. நேற்று 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் திடீரென உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்துக் கொண்டனர். இதன் காரணமாக சுமார் 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுதொடர்பாக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம் விமான டிக்கெட் பணத்தை திருப்பி தருவதாகவும் வேறு தேதிக்கு பயணத்தை மாற்றித் தருவதாகவும் அறிவித்துள்ளது. அதே சமயம், ஊழியர்களுடன் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுப்பதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமம், ஏர் இந்தியா எக்ஸ்பிரசுடன், ஏஐஎக்ஸ் கனெக்ட் (முன்பு ஏர் ஏசியாவாக இருந்தது) விமான நிறுவனத்தை இணைக்க முடிவு செய்ததில் இருந்து ஊழியர்கள் பிரச்னை எழுந்துள்ளது.

விமான நிறுவனத்தின் தவறான நிர்வாகமும், ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லாததாலும் மனதளவில் அதிருப்தி அடைந்திருப்பதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டாடாவிற்கு சொந்தமான விஸ்தாரா விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறையால் 10 சதவீத விமானங்கள் ரத்தாகி குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரசிலும் தற்போது ஊழியர்கள் பிரச்னை இந்திய விமான போக்குவரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

* அறிக்கை கேட்கிறது அமைச்சகம்
இதற்கிடையே, 80க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்குமாறும் ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டிஜிசிஏ விதிமுறைகளின்படி பயணிகளுக்கான வசதிகளை உறுதி செய்யுமாறும் ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 80 விமானங்கள் திடீர் ரத்து: கடைசி நிமிடத்தில் கூறியதால் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Air India Express ,New Delhi ,Tata ,Air India ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறு 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்