ஊட்டி: இ-பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஒரு நாள் ஓட்டல், காட்டேஜ்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இ-பாஸ் முறை கொண்டு வந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், கடந்த இரு நாட்களாக காட்டேஜ் மற்றும் லாட்ஜ்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே, இ-பாஸ் ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபு, செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கூறியதாவது:நீலகிரி மாவட்டம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகளை நம்பியை இங்கு அனைத்து தொழில்களும் உள்ளன. காட்டேஜ் மட்டுமின்றி சாலையோர வியாபாரிகள், டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் இரு மாதங்களை நம்பியே உள்ளன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், காட்டேஜ் மற்றும் லாட்ஜ் புக்கிங் செய்தவர்கள் அனைவரும் புக்கிங் ரத்து செய்து விட்டனர்.
கடந்த இரு நாட்களாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள், ஓட்டல், காட்டேஜ் உரிமையாளர்கள் உட்பட அனைத்து வியாபாரிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இ-பாஸ் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மலர் கண்காட்சி நடக்கும் தினங்களில் ஒரு நாள் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து கடையடைப்பு போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வியாபாரிகளும் ஆதரவு அளித்தால் ஒரு நாள் கடையைடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post ஊட்டியில் இ- பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஓட்டல், காட்டேஜ்களை அடைத்து போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.