- நெல் மாவட்டம்
- காங்
- மதுரை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- நெல்லா
- நெல்லா கிழக்கு மாவட்ட காங்கிரஸ்
- கபகே ஜெயகுமார்
- ஜெயக்குமார்
- அரிசி மாவட்டம் காங்
- தின மலர்
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் மகன்கள், உறவினவர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் ரூ.40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கூலிப்படை மூலம் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை, கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60). கடந்த 2ம்தேதி மாயமான அவரை, 4ம் தேதியன்று போலீசார் அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்டனர். அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28) உவரி காவல் நிலையத்தில் தனது தந்தை மாயமானது குறித்தும், அவர் எழுதிய கடிதங்களையும் ஒப்படைத்தார்.
அதன்பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் 6 நாட்கள் ஆகியும் எவ்வித துப்பும் துலங்கவில்லை. மரண வாக்குமூலம் என்ற பெயரில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதங்கள் போலீசாரின் விசாரணைக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டுள்ள நபர்கள், அவரிடம் கடன் பெற்ற நபர்கள், கடன் வாங்கிய நபர்கள் என அனைவரையும் தனிப்படையினர் தனித்தனியே சந்தித்து, வாக்குமூலம் பெற்றுவிட்டனர்.
கேபிகே ஜெயக்குமார் தனசிங்கின் உறவினர் நாகர்கோவில் அரசு மருத்துவர் செல்வகுமார் தொடங்கி, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, எம்எல்ஏ ரூபி மனோகரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி ஜெயக்குமாரின் கடிதம் தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுவிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர், தாங்கள் பணம் எதுவும் அவரிடம் வாங்கவில்லை என போலீசாரிடம் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் அரசியல் சாராத சில நபர்கள், அவரிடம் கடனாக பெற்ற தொகையை ஒப்புக் கொண்டதோடு, தங்களால் இப்போதைக்கு இவ்வளவு மட்டுமே திரும்பத் தர முடியும் எனக்கூறி அவரது குடும்பத்தினரிடம் தொகையை ஒப்படைத்து வருகின்றனர். சிலர் விரைவில் வாங்கிய கடனை தருகிறோம் என குடும்பத்தினரை சந்தித்து தெரிவித்துள்ளனர். இதுஒருபுறமிருக்க, அவரது சாவுக்கான காரணம் இன்னமும் மர்மமாகவே உள்ளது. நெல்ைல மாவட்ட தனிப்படையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியும், அவரது சாவுக்கு எவ்வித முகாந்திரமும் கிடைத்தபாடில்லை.
இந்நிலையில் உவரி போலீசார் நேற்று ஜெயக்குமாரின் இரு மகன்களையும் மீண்டும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். நெல்லையில் இருந்து அங்கு சென்ற தடயவியல் குழுவினர் மீண்டும் அவர் இறந்து கிடந்த தோட்டம் மற்றும் வீடுகளில் தடயங்களை எடுத்து ஆய்வுகளை மேற்கொண்டது. அதேநேரத்தில் ஜெயக்குமார் மாயமான நாள் முதல் தோட்டத்தில் இறந்து கிடந்த நாள் வரை அப்பகுதியில் 10 கிமீ தூரத்திற்கு சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார், தடயங்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயக்குமார் கொலையில் கூலிப்படைக்கு தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். அதாவது, ஜெயக்குமார் அரசு ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்த நிலையில், அதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக ஒப்பந்த பணியை தொடர முடியாமல் ரியல் எஸ்டேட், வீடுகள் கட்டி விற்பது என தொழில் செய்து வந்தாராம். இதற்காக பலரிடம் கடன் பெற்று ரூ.40 கோடிக்கும் மேல் முதலீடு செய்ததாக தெரிகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் கேபிகே ஜெயக்குமாரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
ஆனால் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாமல் திணறிய ஜெயக்குமார் கடன் பெற்றவர்களிடம் உரிய நேரத்தில் பணத்தை திருப்பித்தர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டவர்களிடம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டியதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர் யாரேனும் கூலிப்படையினரை ஏவி கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 கூலிப்படைகளிடமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கூலிப்படைகளிடமும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 கூலி படையினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
* கடன் வாங்க காரணம் என்ன?
ஜெயக்குமார் கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இத்தொகையை வைத்து வியாபாரத்திலும் முதலீடு செய்துள்ளார். அவர் முன்பு அரசு ஒப்பந்ததாரராக இருந்த நிலையில், அதில் இருந்து சில காரணங்களால் விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறிது காலத்தில் பணப்பிரச்னை எழுந்துள்ளது. இதற்காக சிலரிடம் கடன் வாங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். அதன்பின்னர் அரசியல் சார்ந்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்ததால், நிகழ்ச்சிகள் நடத்தவும் அதிகம் செலவிட வேண்டியதிருந்தது. வருமானம் ஒருபக்கம் இருந்தாலும், செலவு தொகையும் மறுபக்கம் வட்டியும், முதலுமாக அவரை கடனாளியாக மாற்றியுள்ளது.
* செல்போன் அழைப்புகள் ஆய்வு
ஜெயக்குமார் கொலையில் 6வது நாளாக மர்மம் நீடித்து வரும் நிலையில், போலீசார் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்தில் உள்ள செல்போன் டவர்கள், அதில் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டுள்ளனர், அவருக்கு வந்த அழைப்புகள், சந்தேகப்படும் படியான அழைப்புகள் எவை என்பதன் மூலம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர். இதில் அவருக்கு பணம் கொடுத்தவர்கள் உள்ளிட்ட பலர் விசாரணைக்கு பயந்து அவர்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். ஜெயக்குமார் மாயமாவதற்கு முன் இருவர் அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அதுகுறித்த விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயக்குமாரின் 2 செல்போன்களும் மாயமான நிலையில் அவற்றின் இருப்பிடத்தை தொழில்நுட்ப ரீதியாக அறியும் முயற்சியிலும் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு ₹40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கொலையா? மகன்கள், உறவினர்களிடம் மீண்டும் தனிப்படை விசாரணை; மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி கூலிப்படைகளிடம் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.