×
Saravana Stores

சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


சென்னை: பரங்கிமலை காவல் நிலையம் பின்புறம் உள்ள ஆலந்தூர் ராஜா தெருவில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இ பிளாக்கில் ஒரு வீட்டில் கார்த்திகேயன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகறார். இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தலைமை காவலராக உள்ளார். இவர் தனது வீட்டில் வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த ஹஸ்கி என்ற நாயை வளர்த்து வருகிறார். அதே வளாகத்தின் பின்புறம் உள்ள பி பிளாக்கின் ஒரு வீட்டில் குடியிருப்பவர் காவலர் வினோதா. இவர் அசோக் நகரில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் கார்த்திகேயனின் மகன் அஸ்வந்த் (12) வளர்ப்பு நாயை பி பிளாக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதில் வினோதாவின் அண்ணன் மகனான மற்றொரு அஸ்வந்த்தும் (11) விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது வளர்ப்பு நாய், அவனை கடித்தது. இதில் பயந்த சிறுவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். ஆனால், நாய் விடாமல் சிறுவனை துரத்தித் துரத்தி கடித்தது. தடுக்க முயற்சித்தபோது இடது கையில் பல இடங்களில் நாய் பலமாக கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுவன் அங்குள்ள காவலர் மோட்டார் ரூமில் பதுங்கினான். நாய் துரத்தியதில் கீழே விழுந்ததாலும் சிறுவனுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அறிந்த காவலர் வினோதாவின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திகேயனின் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டபோது கார்த்திகேயன் அவர்களை விரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து வினோதா பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வினோதா கூறுகையில், காவலர் குடியிருப்பில் எந்த செல்லப் பிராணியையும் வளர்க்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. அந்த நிபந்தனைக்கு கையெழுத்து போட்டுவிட்டுதான் வசித்து வருகிறோம். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் பிள்ளைகளை வேறொரு பிளாக்கில் வளர்க்கும் நாய் துரத்தித் துரத்தி கடித்துள்ளது. கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு என்னுடைய 7 வயது மகன் இளமாறனை கார்த்திகேயன் பராமரித்து வரும் தெரு நாய் கடித்தது. அப்போதும் அவர் அலட்சியமாக பதில் கூறினார்.

எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் மற்றவர்கள் பிள்ளைகளுக்கு நடக்கக்கூடாது என்றார். 3 நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்கா ஒன்றில் 5 வயது சிறுமியை வீட்டு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Alandur Raja Street ,Parangimalai Police Station ,Karthikeyan ,E block ,Chief Constable of ,and Order ,Vannarappat Police Station ,Dinakaran ,
× RELATED சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது