சென்னை: பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகர், புதுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் செல்வநாதன் மகன் ஹேமச்சந்திரன் (26). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 150 கிலோ எடையுடைய ஹேமச்சந்திரன், உடல் எடையை குறைக்க பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது, எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த ஹேமச்சந்திரனின் பெற்றோர், பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக உயிரிழந்ததாகக்கூறி பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், அந்த தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை மருத்துவத்துறை இணை இயக்குநர் தீர்த்தலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஹேமச்சந்திரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியில் இருந்த நர்ஸ்களிடமும் விசாரித்தனர். இந்நிலையில், அந்த மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததை சோதனையில் கண்டறிந்தனர். அத்துடன், மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை, நவீன கருவிகளை கையாளும் டெக்னீசியன்களும் போதுமான அளவு இல்லாமல் இருந்தனர்.
ஹேமச்சந்திரனின் அறுவை சிகிச்சைக்கு முன்பு, அவரது பெற்றோர்களிடம் தகவலை தெரிவித்து, கையெழுத்து பெறவில்லை. மேலும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள போதிய அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், புதிய நோயாளிகள் யாரையும் சிகிச்சைக்கு சேர்க்கக்கூடாது என்றும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் உடனடியாக வீட்டிற்கு அனுப்பவும், தற்காலிகமாக அந்த மருத்துவமனை செயல்பட தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் தற்போது அந்த தனியார் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்புப் பணிநடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில், விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
The post தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.