×
Saravana Stores

ரஷ்யாவில் உயர்கல்வி பயில தமிழ்நாட்டில் கல்வி கண்காட்சி: மே 11 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: ரஷ்யாவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்காக, அந்நாட்டு பல்கலைக் கழகங்கள் சார்பில் ரஷ்ய உயர்கல்வித்துறை மற்றும் ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட் சேர்ந்து தமிழ்நாட்டில் கல்வி கண்காட்சியை நடத்த உள்ளனர். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச், ரஷ்ய கலாச்சார மைய இயக்குநர் அலெக்சாண்டர் டோடோநவ் ஆகியோர் அளித்த பேட்டி: மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விருப்பமான நாடுகளில், ரஷ்யா முதன்மையாக உள்ளது. தகுதியுள்ள மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஸ்பாட் அட்மிஷன் வழங்கப்படும். எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான கல்விக் கட்டணம், ஆண்டொன்றுக்கு ₹3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

இந்திய மாணவர்களுக்கான மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கடந்த ஆண்டுவரை 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. 2024-25ல் இந்திய மாணவர்களுக்காக இடங்களை 8 ஆயிரமாக உயர்த்தி 30க்கும் மேற்பட்ட ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் அனைத்து சமீபத்திய விதிமுறைகளையும் ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவ கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விருப்பமான நாடுகளில், ரஷ்யா முதன்மையாக உள்ளது.இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 11, 12 ஆகிய தேதிகளில், ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது. எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் வழங்கப்பட உள்ளது.

மே 14ம் தேதி மதுரை ரெசிடென்சி ஓட்டலிலும், மே 15ம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும், மே 16ம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஓட்டலிலும், மே 17ம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்டிலும் கண்காட்சி நடைபெறும். கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசாங்கத்தின் வருடாந்திர உதவித்தொகை திட்டம் வழியாக இந்த ஆண்டும் 200 இந்திய மாணவர்களுக்கு 100% உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, பட்ட மேற்படிப்புத் திட்டங்களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும். போர் காரணமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நாங்கள் போர் நடக்கும் இடத்தில் இருந்து 2 ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கிறோம். மாணவர்கள் பாதுகாப்பிற்கு முறையான ஏற்பாடுகளை அனைத்து பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தியுள்ளன.

The post ரஷ்யாவில் உயர்கல்வி பயில தமிழ்நாட்டில் கல்வி கண்காட்சி: மே 11 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Russia Education Fair ,Tamilnadu ,CHENNAI ,Russia ,Russian Higher Education Department ,Study Abroad Educational Consultants ,Tamil Nadu ,Chennai.… ,Higher Education in ,Russia Education Fair in Tamil ,Nadu ,
× RELATED சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற...