மண்டபம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அமாவாசை தினங்களில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நமது நாட்டில் வடக்கில் காசியும், தெற்கில் ராமேஸ்வரமும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களாக விளங்குகின்றன.
இந்நிலையில், கோயிலுக்கு ஏழ்மையான பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு விடுதிகள் இல்லை. திருக்கோயிலைச் சுற்றி தனியார் விடுதிகள் தான் அதிகளவில் உள்ளன. இதில், பணம் படைத்தவர்கள் மட்டுமே கட்டணம் கொடுத்து தங்க முடியும். இதனால், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.பல லட்சம் மதிப்பில், திருக்கோவில் அலுவலகம் அருகே, 200 பேர் தங்கும் வகையில் பெரிய திறந்த நிலை மண்டபம் கட்டப்பட்டது. இந்த ஓய்வு மண்டபம் பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலியே மூடப்பட்டது. இதனால், திருக்கோயில் நடை சாத்தும் நேரங்களில் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். எனவே, ரூ.பல லட்சம் கட்டப்பட்ட பக்தர்களின் ஓய்வு மண்டபத்தை அடிப்படை வசதிகளோடு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டமிடாத பணிகள்: பக்தர்கள் புகார்
ராமநாதசாமி திருக்கோவிலில் திட்டமிடுதல் இல்லாமல் பணிகளை செய்வதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘சில மாதங்களுக்கு முன், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் நடைமேடையில் ஒரு பக்தர் செல்லும் அளவிற்கு கூண்டு அமைத்து இருந்தனர். தற்போது அந்த கூண்டை அகற்றிவிட்டு மேற்கூரையுடன் கூடிய கூடாரம் அமைத்து வருகின்றனர். இதேபோல, பக்தர்கள் ஓய்வு கூடாரம், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஓய்வு கூடாரம் கட்டுவது உட்பட பல சில பணிகளை முழுமையாக செய்யாமல் முடக்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? appeared first on Dinakaran.