நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறவைகள் படையெடுப்பால் கோடை நெல்பயிர் சாகுபடி பயிர்களை காக்க விவசாயிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஒலி எழுப்பியும், காற்றில் அசைந்தாடும் வகையில் கேரிபேக்குகளை கட்டி தொங்க விட்டும் வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம்தேதி கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களை நம்பி விவசாயிகள் கோடை கால நெல்பயிர் சாகுபடியை பல ஏக்கரில் செய்துள்ளனர். இந்த நெல்விதைகள், நாற்றுகள் பயிர்களை பல்வேறு இன பறவைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
நெல்லை கால்வாய் கடைசி குளமான குப்பக்குறிச்சி குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கோடை கால நெல்பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் பயிர் நடவு முடிந்து நாற்றுக்கள் செழித்து வளர்ந்து காணப்படுகிறது.
இந்த வயல்பரப்பிற்கு அருகே உள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் நீர் வாழ்பறவைகள் தற்போது அதிகளவு குப்பக்குறிச்சி பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. குளத்திற்கு வரும் கொக்குகள், நீர் காகம், கருங்குருவி, நாரைகள் உள்ளிட்ட பல வகை பறவைகள் தினமும் கூட்டம் கூட்டமாக வருகின்றன. குளத்தில் மீன்களை பிடித்து தின்று விட்டு வயல்பரப்பில் காணப்படும் நெல் பயிரையும் பாதம்பார்க்கின்றன. நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களில் பூச்சிகளை பிடிக்க அதிகளவு பறவைகள் படையெடுத்து வந்து விதைகள், நெல் நாற்றுக்களை வயலில் இறங்கி நின்று சேதப்படுத்துகின்றன. பூச்சிகளை பிடிக்க வரும் பறவைகள் நெல் விதைகளையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கடன் வாங்கி வரப்புகளை செதுக்கி, டிராக்டர் வைத்து உழுது நிலத்தை பண்படுத்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்க வயலை சுற்றிலும் கம்புகள் நட்டு வைத்து கயிறுகள் கட்டி அதில் பிளாஸ்டிக் கேரி பைகளை கட்டி தொங்க விட்டுள்ளனர். காற்றில் பிளாஸ்டிக் கேரி பைகள் பறக்கும் போது பறவைகள் பதறி அடித்து பறந்து விடுகின்றன. மேலும் விவசாயிகள் அலுமினிய பாத்திரங்களை பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் அடித்து ஒரு விதமான ஒலி எழுப்பியும் பறவைகளை விரட்டி அடித்து வருகின்றனர். இதனால் பறவைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்து வருவதாகவும். இரவு நேரங்களில் கால்நடைகள் வராமல் தடுக்க காவல் காத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
The post நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.