கோவை: பொள்ளாச்சியை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் பளுதூக்கும் போட்டியில் சாதித்து “திறமைக்கு வயது ஒரு தடையல்ல” என்பதை நிரூபித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மனைவி கிட்டம்மாள். தனது மகன் மற்றும் பேரன்களோடு வசித்து வருகிறார். பேரன்கள் ரோகித் மற்றும் ரித்திக் ஆகிய இருவரும் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் வெற்றிபெற்றிருப்பதால் வார இறுதி நாட்களில் அவர்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். வார இறுதி நாட்களில் பேரன்களுடன் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்ற அவர், அங்கு பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
View this post on Instagram
பாட்டியின் ஆர்வத்தை பார்த்து உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளர் சதீஷ், அவரை தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில் நடத்தப்பட்ட பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில், கிட்டம்மாள் முதல் முயற்சியிலேயே 50 கிலோ எடையை தூக்கி 5ம் இடத்தை பிடித்துள்ளார். அவரது சாதனைகளை பாராட்டி தென்னிந்தியாவின் வலுவான மனிதர் என்ற பட்டத்தை வழங்கி அந்த அமைப்பு கவுரவித்துள்ளது.
பயிற்சியாளரின் அறிவுறுத்தலோடு துணிச்சலாக போட்டியில் பங்கேற்றதாக கூறிய கிட்டம்மாள், தனது உடல் ஆரோக்கியத்துக்கு கம்பங்கூழ், காய்கறி சூப், பேரிச்சம்பழம் போன்ற உணவு முறைகளே காரணம் என்றார். 82 வயதிலும் கிட்டம்மாள் பாட்டி சாதிக்க அவரது ஆரோக்கியமான உணவு முறையே காரணம் என்றும் இளம் தலைமுறையினரும் அதேபோல துரித உணவுகளை தவிர்த்தால் சாதிக்க முடியும் என்றும் பயிற்சியாளர் சதீஷ் அறிவுறுத்தினார். சாதிக்க வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கும் கிட்டம்மாள் பாட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
The post “சாதிக்க வயது தடையில்லை”: பளு தூக்கும் போட்டியில் வென்ற 82 வயது பாட்டி..குவியும் பாராட்டு..!! appeared first on Dinakaran.