×
Saravana Stores

புதிய தடுப்பூசிகள் அதிகம் வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு

லண்டன்: புதிய தடுப்பூசிகள் அதிகம் சந்தைக்கு வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் சீரம் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை லண்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராசெனகா நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர், தனக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் குறித்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பிரிட்டனை சேர்ந்த அஸ்ட்ராசெனகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம்’ எனத் தெரிவித்தது. இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே லண்டன் உயர்நீதிமன்றத்தில் அஸ்ட்ராசெனகா தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் காருண்யா, ரிதாய்கா ஆகிய இளம்பெண்கள் உயிரிழந்துள்ளதாக கூறி அவர்களின் பெற்றோர்கள் சீரம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், உலகளவில் தங்களின் கெரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிய வகை கொரோனாவுக்கு ஏற்ப பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அதிகளவில் சந்தைகளில் இருப்பதால், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளது. அதனால் அந்த தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

The post புதிய தடுப்பூசிகள் அதிகம் வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு appeared first on Dinakaran.

Tags : amid side-effect ,LONDON ,Serum Company ,India ,Corona ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!