×

ஓம் சரவணபவ: முருகனின் 16 வகை ரூபங்கள்…எந்த வடிவத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

முருகப் பெருமானுக்குரிய அறுபடை வீடுகள் தவிர பல ஆலயங்களிலும் பல்வேறு ரூபங்களில் தரிசிக்கலாம். முருகப் பெருமானை ஒவ்வொரு திருக்கோலத்திலும் தரிசிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்களை பெற முடியும். இவற்றில் மிக விசேஷமானது 16 திருக்கோலங்கள். இந்த திருக்கோலங்களை எந்தெந்த தலங்களில் தரிசிக்க முடியும், இவற்றை தரிசிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு, நமக்கான பிரச்சனைகள் அல்லது தேவைகளுக்கு ஏற்ற ஆலயங்களில் சென்று முருகனை தரிசித்தால் முழு பலனையும் பெற முடியும்.

1. ஞானசக்திதரர் – முருகனின் இந்த ரூபத்தை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். திருத்தணியில் முருகப் பெருமான் ஞானசக்திதரர் கோலத்திலேயே காட்சி அளிக்கிறார்.

2. கந்தசாமி – இந்த முருகனை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பழனி மலை கோவிலில் இருக்கும் தண்டாயுதபாணி, கந்தசாமி திருவடிவம் ஆகும்.

3. ஆறுமுக தேவசேனாதிபதி – இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்க்கை அமையும். ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் கருவறையில் மறைந்துள்ள மாடத்தில் இந்த வடிவத்தை தரிசிக்கலாம்.

4. சுப்பிரமணியர் – முருகனின் இந்த கோலத்தை வழிபடுபவர்களுக்கு வினைகள் அனைத்தும் விலகி ஆனந்தமான வாழ்க்கை அமையும். நாகை மாவட்டம் திருவிடைகழி முருகன் கோவிலில் சுப்ரமணிய ரூபத்தில் முருகனை காணலாம்.

5. கஜவாகனர் – யானை மீது காட்சி தரும் முருகனின் இந்த வடிவத்தை வழிபட்டால் துன்பங்கள் விலகும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் ஆகிய இடங்களில் இந்த வடிவத்தை தரிசிக்கலாம்.

6. சரவணபவர் – தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அமைதி, வீரம், கேட்கும் வரங்கள், இரக்கம், மங்கலங்கள் உள்ளிட்ட குணங்களை தரக்கூடிய கோலம் சரவணபவர் கோலம். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரின் உருவத்தை காணலாம்.

7. கார்த்திகேயர் – முருகனின் இந்த வடிவத்தை வழிபட்டால் சகல விதமான செளபாக்கியங்களும் வந்த சேரும். கார்த்திகை நட்சத்திர நாளில் இவரை வழிபடுவது சிறப்பு. கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் இந்த ரூபத்தை தரிசிக்கலாம்.

8. குமாரசாமி – இந்த முருகனை வழிபட்டால் ஆணவ குணம் நீங்கும். நாகர்கோவில் அருகில் உள்ள குமாரகோவிலில் இந்த ரூபத்தை தரிசிக்கலாம். கங்கை கொண்ட சோழபுரத்தில் இவரை பஞ்சலோக வடிவத்தில் தரிசிக்கலாம்.

9. சண்முகர் – இவரை வழிபட்டால் சிவ – சக்தி இருவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில், சண்முகரின் அருட்கோலத்தை தரிசிக்க முடியும்.

10. தாரகாரி – தாரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்ததால் முருகப் பெருமானுக்கு இந்த தஇருநாமம் ஏற்பட்டது. இவரை வழிபட்டால் உலக மாயைகளில் இருந்து விடுபட செய்வார். விராலி மலையில் இந்த முருகனின் கோலத்தை காணலாம்.

11. சேனானி – இந்த முருகனை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை போன்ற தீய குணங்கள் நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் இந்த முருகனை தரிசிக்கலாம்.

12. பிரம்மசாஸ்தா – இந்த முருகனை வழிபட்டால் அனைத்து விதமான வித்தைகளிலும் தேர்ச்சி அடையலாம். அனைத்து விதமான கலை சார்ந்த அறிவும் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். காஞ்சிபுரம் குமரக்கோட்டம், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய தலங்களில் முருகனின் இந்த கோலத்தை காணலாம்.

13. வள்ளிகல்யாணசுந்தரர் – முருகனின் இந்த வடிவத்தை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கன்னிப் பெண்கள் இவரை வழிபட்டால் விரைவில் திருமணம் கை கூடி வரும். திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இந்த முருகனை காணலாம்.

14. பாலசுவாமி – இந்த முருகன் உடல் ஊனங்களையும், குறைகளையும் நீக்கக் கூடிய தெய்வமாக உள்ளார். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் ஏற்படும். திருச்செந்தூர், திருக்கண்டிர் ஆகிய தலங்களில் இந்த முருகனை தரிசிக்கலாம்.

15. சிரவுபஞ்சபேதனர் – இவரை வழிபட்டால் துன்பங்கள், மனக்குழப்பங்கள் நீங்கும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரை தரிசிக்கலாம்.

16. சிகிவாகனர் – மயில் மீது இருக்கும் இந்த திருவுருவை பல ஆலயங்களில் தரிசிக்கலாம். இவரை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்க்கை அமையும்.

The post ஓம் சரவணபவ: முருகனின் 16 வகை ரூபங்கள்…எந்த வடிவத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்? appeared first on Dinakaran.

Tags : Arupada Houses ,Lord ,Muruga ,Thirkola ,
× RELATED வல்லமை தருவான் வடபழனி முருகன்