மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைபொருள், வெளிநாட்டு கரன்சி மற்றும் அரியவகை உயிரினங்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் பலகோடி மதிப்பிலான தங்கம், போதைபொருள், வெளிநாட்டு கரன்சி மற்றும் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் சென்னை விமான நிலையம் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறிவிட்டதோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
சென்னை விமானநிலையத்தில் தங்கம், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. நடப்பு 2023-24ம் ஆண்டில் மட்டும் கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து ரூ.248.70 கோடி மதிப்பிலான 440 கிலோ தங்கம், ரூ.192 கோடி மதிப்பில் 42.68 கிலோ பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பல்வேறு நபர்களிடம் ரூ.19.44 கோடி வெளிநாட்டு கரன்சிகள், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 150க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதுவே, கடந்த 2022-23 ஆண்டில் ரூ.137.66 கோடி மதிப்பில் 291 கிலோ தங்கம், ரூ.45 கோடி மதிப்பிலான 21.39 கிலோ போதைப் பொருள், ரூ.10.47 கோடி மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள், சுமார் 60 வகை வெளிநாட்டு உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும், கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.62.10 கோடி மதிப்பில் 144.55 கிலோ தங்கம், ரூ.60 கோடி மதிப்பிலான 33.72 கிலோ போதை பொருள், ரூ.7.53 கோடி மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள், 2 வழக்குகளில் 17 வெளிநாட்டு உயிர் இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சென்னை விமானநிலையத்துக்கு துபாய், அபுதாபி சார்ஜா, குவைத், இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுகிறது. அதேபோல், ஆப்ரிக்க நாடுகளில் இருந்து அதிகளவில் போதைப்
பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. மேலும், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அரிய வகை வனஉயிரினங்கள் கடத்தி வருகின்றனர். அதேபோல், சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சிகள் அதிகளவில் கடத்தப்படுகின்றன. சென்னை விமானநிலையத்தில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் அரிய வகை வனஉயிரினங்களை சுங்கச் சோதனையில் கண்டுபிடித்து, மத்திய வன குற்றப்பிரிவு அலுவலர்கள் உதவியுடன், அவற்றை மீண்டும் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
சென்னை விமானநிலையத்தில் கடந்த 2023-24ம் ஆண்டில் 878 பயணிகளிடம் இருந்து ரூ.184.70 கோடி மதிப்பில் 344 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மட்டும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் தவிர, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11 வழக்குகளில் 132 பேரிடம் இருந்து ரூ.64 கோடி மதிப்பிலான 96 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.248 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பு ஆண்டில் அதிகளவில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து, சென்னை விமானநிலையம் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறிவிட்டதோ என்று பயணிகள் மற்றும் அதிகாரிகளிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது.
The post சென்னை விமானநிலையத்தில் நடப்பு ஆண்டில் பலகோடி தங்கம் போதைபொருள் பறிமுதல்: கடத்தல் சம்பவம் அதிகரிப்பு appeared first on Dinakaran.