ஆத்தூர்: சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முகநாதன். இவர், நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி தலைமை வழங்கிய பணத்தை சுருட்டி கொண்டதாக கடந்த 1ம் தேதி ஆத்தூர் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நரசிங்கபுரம் நகர பாஜ செயலாளராக இருந்த அனிதா உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். முன்னாள் நகர செயலாளர் அனிதா, ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதில், கடந்த மாதம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாமக அலுவலகத்தில் இருந்தேன். அப்போது பாஜ நகர தலைவர் சுதாகர், என்னை மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டார். அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். ஆனால், மாவட்ட தலைவரின் மெத்தனபோக்காலும், அவருக்கு வலதுகரமாக இருப்பதாலும் சுதாகர், நரசிங்கபுரம் நகருக்குள் இருக்கும் ஒரு சில மகளிரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுடன், அவர்களை அசிங்கமாக திட்டியும் வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதேபோல், சேலம் கிழக்கு மாவட்ட பாஜ கலை கலாச்சார பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, ஆத்தூர் நகர போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், மாவட்ட தலைவரின் தூண்டுதலின்பேரில் நிர்வாகி சுதாகர் உள்ளிட்ட சிலர் எனது செல்போனுக்கு அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு பதிவுகளை போட்டு வருகின்றனர். என்னையும், எனது கணவரையும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இப்பெண்களின் புகார் மீது ஆத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நரசிங்கபுரம் நகர பாஜ தலைவர் சுதாகர், ஆத்தூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், பாஜ மாவட்ட தலைவர் சண்முகநாதன் குறித்து அவதூறாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கேசவன், குமார், வேல்முருகன், அனிதா, விஜயலட்சுமி உள்ளிட்ட 7 பேர் கூட்டாக சேர்ந்து ஒட்டியுள்ளனர் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இப்படி அடுத்தடுத்து பாஜவினரிடையே ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ள நிலையில், அனைத்து புகார்களின் மீதும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு பெண் நிர்வாகி மாயம்: இதனிடையே விஜயலட்சுமி பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தன் மீதான புகாரால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். எனது கணவர், குழந்தைகளை பார்த்து கொள்ளுங்கள். தற்கொலை செய்து கொள்ள இருக்கிறேன்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் சுரேஷ்மணி, ஆத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘எனது மனைவி ஆடியோ வெளியிட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் காணவில்லை, அவரை கண்டுபிடித்து தர வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார்: போஸ்டர் ஒட்டியவர்கள் மீது எதிர்தரப்பும் புகார் appeared first on Dinakaran.