×

மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே வா’ என்றதால் டிரைவர் மீது பாட்டில் வீச்சு: தப்பிய மர்ம நபருக்கு வலை

தண்டையார்பேட்டை: மாநகர பேருந்து படியில் பயணம் செய்த மர்மநபரை உள்ளே வா என்ற தகராறில் டிரைவர் மீது பாட்டிலை எடுத்து வீசி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்து (தடம் எண் 44) நேற்று மாலை புறப்பட்டது. பேருந்தை டிரைவர் வேல்முருகன் (52) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது பேருந்தில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். இதை பார்த்த டிரைவர், படியில் தொங்காதே, உள்ளே வா என கூறியுள்ளார். இதனால் டிரைவருக்கும் வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாலிபர் இறங்கி சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து பேருந்து பிராட்வே பேருந்து நிலையம் சென்றுவிட்டு மீண்டும் தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்துக்கு புறப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனை வந்தபோது, மர்ம நபர் டிரைவர் மீது காலி பாட்டிலை வீசியுள்ளார். இதனால் டிரைவரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து டிரைவர் வேல்முருகன் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஏழுகிணறு காவல்நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மீது பாட்டிலை வீசிவிட்டு தப்பிய மர்மநபரை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே வா’ என்றதால் டிரைவர் மீது பாட்டில் வீச்சு: தப்பிய மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Thandaiarpet ,IOC Bus Station ,Broadway Bus Station… ,
× RELATED தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்