தாம்பரம்: நெடுங்குன்றம் ஊராட்சியில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளால் சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், பீர்க்கன்காரணை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நெடுங்குன்றம் சுடுகாடு உள்ளது. இதனருகே ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுங்குன்றம் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவு, மீன், நண்டு, கோழி, ஆடு, மாடுகளின் இறைச்சி கழிவுகள் தினமும் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
இதனால் இந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பை மர்ம நபர்களால் எரிக்கப்படுவதால் திடீர்திடீரென புகை மூட்டமாக மாறும் நிலைஏற்படுகிறது. இதுமட்டுமின்றி இங்குள்ள குட்டையிலும் குப்பை மற்றும் இறைச்சி கழிவு கொட்டப்படுகிறது. மேலும் தனியார் லாரிகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுநீர் குட்டை மற்றும் திறந்தவெளியில் விடப்படுவதால் நிலத்தடி நீர்மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து இரவில் வீடுகளில் தூங்கமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் குப்பையில் உள்ள பிளாஸ்டிக்களை ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உண்ணுவதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்குள் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post நெடுங்குன்றம் ஊராட்சியில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.