×
Saravana Stores

பூதாகரமாகும் ஜெயக்குமார் மரணம்!: வாயில் இரும்பு பிரஷ் எங்கிருந்து வந்தது?..கடைசி நாட்களில் கடனில் சிக்கி தவித்தாரா?..துப்புதுலக்கும் போலீஸ்..!!

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 5-வது நாளாக போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முக்கிய தடயங்கள் ஏதாவது இருக்கின்றனவா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையே மரணத்துக்கு காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தோட்டத்தில் ஜெயக்குமார் உடல் கிடந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் வள்ளியூர் டிஎஸ்பி தலைமையில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. தோட்டப் பகுதியில் உள்ள கிணறு, புதர், மரங்களில் அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய தடயங்கள் சிக்குமா? என போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

வாயில் இரும்பு பிரஷ் – எங்கிருந்து வந்தது?

சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வாயிலிருந்து எடுக்கப்பட்ட பாத்திரம் கழுவும் இரும்பு பிரஷ் எங்கிருந்து வந்தது என்ற தகவல் விசாரணையில் வெளியாகி இருக்கிறது. கழுத்தை சுற்றியிருந்த இரும்புக் கம்பியும் எப்படி அங்கு வந்தது என்பது குறித்த தகவலும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரும்பு பிரஷ் மற்றும் இரும்புக் கம்பி, பிளேடு போன்றவை ஜெயக்குமாரின் வீட்டிலிருந்தே கொண்டு வரப்பட்டவை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. ஜெயக்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், தோட்டத்தில் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்ததில் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி நாட்களில் கடனில் தவித்த ஜெயக்குமார்:

தனது ஒட்டுமொத்த சொத்தையும் வங்கிகளில் அடமானம் வைத்து சுமார் 4 கோடிக்கும் மேல் ஜெயக்குமார் கடன் வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மாதா மாதம் வங்கிகளுக்கான வட்டியாக மட்டுமே சுமார் 5 லட்ச ரூபாய் கட்டி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வட்டி கட்ட முடியாமல் ஜெயக்குமார் தவித்ததாகவும் காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கடனை வசூலிக்க அடமானம் வைக்கப்பட்ட ஜெயக்குமாரின் சொத்துக்களை ஏலம் விடும் நடைமுறைகளை வங்கிகள் பரிசீலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. கான்டிராக்ட் தொழிலில் பெருத்த நஷ்டத்தில் இருந்த ஜெயக்குமார் வங்கியில் வாங்கிய பணத்தை அரசியலில் செலவிட்டது உண்மையா என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

The post பூதாகரமாகும் ஜெயக்குமார் மரணம்!: வாயில் இரும்பு பிரஷ் எங்கிருந்து வந்தது?..கடைசி நாட்களில் கடனில் சிக்கி தவித்தாரா?..துப்புதுலக்கும் போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Jeyakumar ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar ,Nellie East District ,Karaisuthuputur ,Vektianvilai ,
× RELATED மாடு மீது பைக் மோதி முதியவர் உயிரிழப்பு