*விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆம்பூர் : ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கடும் வெயிலின் தாக்கம் குறைந்து சில்லென்ற காற்று வீச துவங்கியது.
இதை தொடர்ந்து மிட்டாளம், கரும்பூர், வெங்கடசமுத்திரம், கைலாசகிரி, ராஜக்கல், ஆம்பூரில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகம் காரணமாக ஆம்பூர் மற்றும் பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டானது. இதனால் இரவு முழுவதும் பெரும்பாலான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதை தொடர்ந்து நேற்று காலை மின் இணைப்புகள் சரி செய்யப்பட்டு மின்வாரியத்தினர் மின் சப்ளை வழங்கினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை வரை விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையால் பச்சகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வறண்டு காய்ந்த நிலையில் இருந்த பாலாற்றில் வெள்ளம் வழிந்தோடி வருவதை அறிந்த அப்பகுதியினர் அமாவாசை தினமான நேற்று மலர் தூவி, மஞ்சள், குங்குமம் இட்டு வெள்ளநீரில் பூஜை செய்தனர். கத்தரி வெயில் வாட்டி வரும் நிலையில் 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் தகித்து வரும் நிலையில் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் கனமழையால் பாலாற்றில் திடீர் வெள்ளம் appeared first on Dinakaran.