*மருத்துவர்கள் அறிவுறுத்தல்
காரமடை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு வாட்டி வதைத்து வருகிறது. இதனால் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்கி வருகின்றனர்.தமிழகத்தில் வெப்ப அலை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு நீண்ட நேரம், நீண்ட தூரம் வாகனங்களில் செல்வோர், உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த வெப்ப அலையில் சிக்கி ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாய சூழல் உள்ளது.
இதுகுறித்து காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர் கூறுகையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடை வெயில் சற்று அதிகமாகவே உள்ளது.இதனால் தான் உச்சி வெயில் காலமான 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உடலில் சூடு ஏற்பட்டு மயக்கம், நாக்கு வறண்டு போதல், அதிகப்படியான வியர்வை, ஞாபக சக்தி குறைவு, நீர்ச்சத்துக் குறைவு ஏற்பட்டு இறுதியாக மரணம் நிகழக்கூடிய சூழல் உள்ளது.
மேலும், கோடைகால நோய்களான அம்மை, மணல் வாரி அம்மை, பூஞ்சை தொற்று உள்ளிட்டவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க உச்சி வெயில் காலமான 12-3 வரை தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.குறிப்பாக குழந்தைகள்,முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இதேபோல் ஏசியில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏசியில் தொடர்ந்து இருந்து விட்டு பின்னர் வெளியே வந்தால் உடல் சூடு அதிகமாகி விடும். அடர் நிறங்களில் உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். கதர் ஆடைகளை அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
வெளியே செல்லும்போது குடை எடுத்துச்செல்லலாம், குறிப்பாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இளநீர், மோர், நுங்கு, கூழ் மற்றும் குளிர்ச்சியான திரவ ஆதாரங்களை உட்கொள்ளலாம். சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.பகல் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் உடல் சூடு, மயக்கம், ஞாபக சக்தி குறைவு,நீர்ச்சத்துக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை உடனடியாக அணுக வேண்டும். அவ்வாறு அணுகுவதன் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏசி, ஆக்சிஜன், படுக்கைகள் அடங்கிய உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு ஹீட் ஸ்ட்ரோக்கால் அனுமதிக்கப்படுவ்வவோருக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் புறநோயாளிகள்,உள் நோயாளிகள், சிகிச்சை பெறுவோரின் உறவினர்களுக்கும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
The post நீண்ட நேரம் ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.