×
Saravana Stores

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வாறுகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

*தொற்று நோய் பரவும் அபாயம்

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகே வாறுகாலில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள் நோயாளிகளை பார்க்க ஏராளமான உறவினர்களும் மருத்துவமனைக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் அருகே பெரிய வாறுகால் உள்ளது. அதில் எப்போதும் கழிவு நீர் தேங்கியே கிடக்கிறது. திறந்த நிலையில் வாறுகால் உள்ளதால் அதிலிருந்து துர்நாற்றம் அடித்து வருகிறது. இதனால், மருத்துவமனைக்கு வந்து செல்வோர் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.

இதுகுறித்து கவுன்சிலர் ராஜ்குமார் கூறுகையில், தினசரி நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அப்போது வெளியே உள்ள வாறுகாலின் நாற்றம் தாங்க முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். பலர் குழந்தைகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு வேறு பல நோய்கள் தாக்கும் நிலை உள்ளது. மேலும், தேங்கிக் கிடக்கும் கழிவுநீரில் உருவாகியுள்ள கொசுக்களினால் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் கொசுத் தொல்லையும் அதிக அளவில் உள்ளது. இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வாறுகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Government Medical College Hospital ,Virudhunagar ,Ramamurthy Road ,Virudhu Nagar ,
× RELATED அரசு மருத்துவக் கல்லூரி...