×
Saravana Stores

தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு குறைபாடுடன் இயக்கினால் உரிமம் ரத்து

*போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துதுறை சார்பில் நேற்று தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறைபாடுடன் உள்ள பழைய வாகனத்தை இயக்கினால் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். தமிழகம் முழுவதும், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இதில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தில் பள்ளிகள் திறக்க உள்ளதையடுத்து, தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா?, அதில் அனைத்து வசதிகளும் உள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இதில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 65க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் சுமார் 370க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்று நேற்று ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு, மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வரைமுறை மற்றும் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்குவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக டிரைவர்களுக்கு, தீத்தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனங்களையும், பொள்ளாச்சி வருவாய் கோட்ட உதவி கலெக்டர் கேத்ரின் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், சில வாகனங்களில் அதிகாரிகள் ஏறி, குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரம் பயணித்து, வாகனத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா?, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? என்பதை குறித்து கேட்டறிந்தும், பஸ்சில் இருக்கை, மேல்பலகை உள்ளிட்டவை உறுதியாக உள்ளதா?, வேகக்கட்டுப்பாடு கருவி உள்ளதா?, அவசரகால வழி உள்ளதா?,

முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சில வாகனங்களில் குறைபாடுகள் இருந்ததால், அந்த வாகனங்கள் மாணவர்களை கொண்டு இயக்க தடை விதிக்கப்பட்டு முழுமையாக பழுது பார்க்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான அத்தாச்சி சான்றுபெற்று அதன் பிறகே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முழுமையான ஆய்வுக்கு பிறகே மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,“கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதில், தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் வாகனங்களில் அவசர கதவு உள்ளதா?, பழுதாகியுள்ளதா? என்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

வாகனத்தில் சிறிய குறைபாடுகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனத்தை கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சீராக உள்ளதா? என்று பரிசோதிக்கப்படும், அதன்பிறகே வாகனத்தை இயக்க அனுமதிப்போம். குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் வாகன உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

The post தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு குறைபாடுடன் இயக்கினால் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Traffic Department ,Pollachi ,Pollachi Regional Transport Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற...