×
Saravana Stores

அதிகரித்து வரும் தின்பண்ட கடைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் திணறும் புதுச்சேரி நகரம்

* அரசின் தடை உத்தரவால் துளியும் பயனில்லை

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு அரசு தடை விதித்தது. அதன்படி பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சு குழல்கள், தட்டுகள், பிளாஸ்டிக் பேப்பர், டீ, குடிநீர் கப்புகள், கரண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனை வியாபாரிகள் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உள்ளாட்சித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து 2022ம் ஆண்டு சட்டசபை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவு வந்த இரண்டு நாட்களுக்கு அதிகாரிகள் பம்பரமாக சுழன்று 10 கிலோ, 20 கிலோ பிளாஸ்டிக் பிடித்துவிட்டோம், இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துவிட்டோம் எனக்கூறினார்கள். ஆனால் அதன்பிறகு ஒரு நடவடிக்கையும் இல்லை. புதுச்சேரியில் தற்போது முன்பை விட பலமடங்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக டிபன் கடைகள், பாஸ்ட்புட் கடைகள், திண்பண்டம் விற்கும் கடைகளில் பார்சல் கொண்டு செல்ல பிளாஸ்டிக் பைகள்தான் இன்றும் உபயோகப்படுத்தப்படுகிறது. பானிபூரி விற்கும் கடைகளில் பிளாஸ்டிக் கரண்டிகள், தட்டுகள் பயன்பாடு மீண்டும் சகஜமாகி விட்டது.

புதுச்சேரியில் திரும்பும் இடமெல்லாம் மதுபான கூடங்கள் இருக்கும். அதற்கு பக்கத்திலே சைடிஸ் கடைகள் எக்கச்சக்கமாக முளைத்துவிட்டது. இங்கெல்லாம் பிளாஸ்டிக் பைகளில்தான் திண்பண்டங்களை கொடுத்து அனுப்புகின்றனர். பொதுவெளியில் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் பைகளை வீசிவிட்டு செல்லும் அவலம் தொடர்கிறது.

தற்போது புதுச்சேரி முழுவதும் சாலையோர கடைகளும் அதிகரித்துவிட்டது, நகரப்பகுதியில் மட்டும் திண்பண்ட கடைகளின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த கடைகளில் அதிகப்படியாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் நகரப்பகுதியின் பிரதான சாலைகளில் பிளாஸ்டிக் பேப்பர், பைகள் காற்றில் பறந்து ஆங்காங்கே உள்ள வாய்க்காலில் அடைத்துக்கொள்கிறது.

இது குறித்து துப்புரவுப்பணி ஊழியர்களிடம் கேட்டபோது, குப்பை வாரும்போது முன்பை விட அதிகப்படியான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதை எங்களால் கவனிக்க முடிகிறது. குறிப்பாக பைகள் மற்றும் ஜூஸ் டம்பளர்கள், உறிஞ்சு குழல்கள், டிபன் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர், அலுமினிய பைகள், பிளாஸ்டிக் கரண்டிகள் அதிகமாக கிடக்கிறது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகளும் அதிகமாக இருக்கிறது.

வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒப்பிடும்போது, வணிக நிறுவனங்களில் பயன்பாடு அதிகமாக இருப்பது தெரியவருகிறது, என்றனர்.உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியாக சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தோம். தற்போது தேர்தல் நேரம் என்பதால், பணிகளில் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு, இது குறித்து எச்சரிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு அபாரதம் விதிக்கப்படும், என்றனர். சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, தமிழகத்தில் கூட பிளாஸ்டிக் தடை உத்தரவு, ஓரளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் புதுச்சேரியை பொறுத்தவரை ஜீரோ என்ற நிலைதான். சட்டம் இருக்கிறது, ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில், அதிகாரிகளுக்கு அக்கறையில்லை. இன்னும் சில ஆண்டுகள் இதே நிலை நீடித்தால், புதுச்சேரி குப்பை மேடாகிவிடும். அதேபோல் பிளாஸ்டிக் பைகள், கரண்டிகள் உற்பத்தியை நிறுத்தாதவரை இந்த பிரச்னைக்கு தீர்வு இல்லை என்றார்.

The post அதிகரித்து வரும் தின்பண்ட கடைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் திணறும் புதுச்சேரி நகரம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி