சாயல்குடி : கடலாடியில் பாதாளகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் களரி திருவிழாவும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு விழாவும் கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் திருவிழா நடத்தப்பட்டது.
சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக 5 தலைமுறையாக இக்கோயிலுக்கு சாமியாடிகளாக தேவர், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் உள்ளனர். இதற்காக ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு முன்பு பிடி மண் கொடுக்கப்பட்டு, பூதங்குடி பூசாரி குடும்பத்தினரால் காவல் தெய்வங்கள், தவளும் பிள்ளைகள், நாகர், காளை, பசு, நாய் போன்ற உருவங்கள் செய்யப்பட்டது.
ஒப்பிலான் கடலில் இருசமுதாயத்தை சேர்ந்த பூசாரிகள், சாமியாடிகள் கடலில் புனிதநீராடி 48 நாட்கள் கடும் விரதம் இருக்கின்றனர். ஒரு வாரம் கொண்டாடப்படும் களரி திருவிழாவிற்கு கிராமமக்கள் கடந்த வாரம் செவ்வாய் கிழமை காப்பு கட்டிவிரதம் தொடங்கினர். விழாவில் கடைசி 3 நாள் இரவு நேரத்தில் சாமியாட்டம், அருள்வாக்கு சொல்லுதல் நடைபெற்றது.
இதற்காக 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதாள காளியம்மனின் அண்ணனாக கருதப்படும் கூரான்கோட்டை முனீஸ்வரரின் எல்லையான மலட்டாற்றிற்கு சாமியாடிகள் நள்ளிரவு 12 மணிக்கு சூலாயுதம், பிரம்பு, தீபந்தத்துடன் தனியாக சென்று, வழிபட்டு அருள் வாங்கி, திரும்ப ஓடி வந்து அருள் வாக்கு சொல்கின்றனர்.
கடைசி நாளான நேற்று இரவில் ஆணி செருப்பு அணிந்து, கையில் தீச்சட்டி எடுத்து பரணியில் உதிரம் பூஜை செய்தப்பிறகு அருள் வாக்கு சொல்லப்பட்டது.அதன் பிறகு 7 நாட்கள் கோயில் நடை சாற்றப்பட்டு, சேவல் பலியிடப்பட்ட பிறகு கோயில் நடை திறக்கப்படுகிறது. மேலும் மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், பல தரப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக புரவி எடுப்பு கொண்டாடப்படுகிறது.
இருப்பினும் விவசாயிகளான இருசமுதாயத்தினரும் ஒற்றுமையாக விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், கிராம மக்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் அம்மன், கருப்பன் உள்ளிட்ட சாமி சிலைகள், நாகர், பசு,காளை,நாய் மற்றும் தவளும் பிள்ளை உருவங்கள் எடுத்துவந்து கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
சாதி பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இத்திருவிழா சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது. இத்திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.சாமி சிலை, தவளும் பிள்ளை எடுப்பதற்கு முன்பாக கடந்தாண்டு அறுவடை செய்யப்பட்ட நெல்லை மண்ணால் செய்யப்பட்ட சாமி உருவங்கள் முன்பு கொட்டி வழிபாடு செய்து, பூசாரிகளிடம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொடுத்து விட்டு, பூசாரி திரும்ப கொடுக்கின்ற விபூதி கலந்த ஒரு பிடி விதை நெல்லை ஆடி பட்டத்தில் விதைத்து வருகின்றனர். இதனால் நல்ல விளைச்சல் வரும் என நம்பப்படுகிறது.
The post சமூக நல்லிணக்கத்துடன் விவசாயத்திற்காக கொண்டாடும் திருவிழா appeared first on Dinakaran.