- வடலூர் வல்லர் இண்டர்நேஷன
- உயர் நீதிமன்றம்
- வடலூர்
- தொல்பொருள்
- வடலூர் அறங்காவலர் குழு
- உயர் நீதி கவுன்சில்
- சத்யா கன்சபா
- வள்ளலார்
- வடலூர் மாவட்டம்
- கடலூர்
- Taipusa
- நீதிமன்றம்
- தின மலர்
வடலூர் : உயர்நீதி மன்ற உத்தரவுப்படி வடலூர் சத்தியஞான சபையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மேலும் இங்கு தைப்பூச தினத்தில் ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த மையத்தில் தமிழக அரசு ரூ. 100 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது. இதை கண்டித்து கடந்த மாதம் 8ம் தேதி அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் தோண்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தில் பழங்கால சுவர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த சுவர்கள் பழமையான கற்களை கொண்டும் சுண்ணாம்பு கலவையாலும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தேர்தல் முடிந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் விழுப்புரத்தை சேர்ந்த தமிழ்வேங்கை, அதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த வினோத் ராகவேந்திரன் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் இடத்தை தொல்லியல் துறை குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கையை மே 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி தொல்லியல் துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவையடுத்து தமிழக அரசும், தொல்லியல் துறை ஆய்வுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையின் பெருவெளியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியை மே 10ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து நேற்று மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் டாக்டர் சிவானந்தன் தலைமையில் இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர், மாநில தொல்லியல் துறை ஆலோசகர் தயாளன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர் செல்வகுமார், தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், கோட்ட பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் கலையரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வடலூர் ராஜராஜன், தெர்மல் செந்தில்குமார், குள்ளஞ்சாவடி அசோகன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு appeared first on Dinakaran.