×
Saravana Stores

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை; புதுமையான அனுபவங்களோடு மாணவர்கள் கல்வி கற்பார்கள்..!!

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வரின் சீரிய முயற்சியால் தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வை முன்னெடுப்பு நடவடிக்கையாக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 6,223 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 6,992 நடுநிலை பள்ளிகளில் 3,267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு 100 Mbps அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 19,668 அரசு பள்ளிகளில் இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு மாணவர்கள் கல்வி கற்பார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளிகளில் இணையதள வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும் திறக்கப்படும் போது அரசு பள்ளிகள் 100 சதவீதம் இணைய வசதியுடன் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை; புதுமையான அனுபவங்களோடு மாணவர்கள் கல்வி கற்பார்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Department of School Education ,
× RELATED பள்ளிகளை ஆய்வு செய்யாத 145...