திருச்சுழி, மே 8: திருச்சுழியில் இருந்து உடையானம்பட்டி செல்லும் சாலையில் குண்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சுழியில் இருந்து உடையானம்பட்டிக்கு செல்லும் சாலையின் குறுக்கே குண்டாறு செல்கிறது. குண்டாற்றின் தரைப்பாலம் வழியாக தினமும் உடையானம்பட்டி, கேத்தநாயக்கன்பட்டி, சென்னிலைகுடி, கடம்பன்குளம், தாமரைக்குளம் உள்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் திருச்சுழிக்கு வந்து பல்வேறு ஊர்களுக்கும், மாணவ, மாணவியர் படிப்பதற்கும் வந்து செல்கின்றனர்.
இச்சாலையில் உள்ள குண்டாற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடனடியாக உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதன் விளைவாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.731.53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மழைக்காலம் வருவதற்கு முன்பாக பணிகள் முடிவடையும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post திருச்சுழி-உடையானம்பட்டி இடையே குண்டாறு குறுக்கே உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு appeared first on Dinakaran.