×
Saravana Stores

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 22ம் தேதி திருவிழா துவக்கம்

திருவாரூர், மே 8: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா வரும் 22ம் தேதி துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுவதையொட்டி தெப்பம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி நிலப்பரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் இருந்து வரும் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் பங்குனி உத்திர விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெற்றது. மேலும் தெப்ப திருவிழா நாள் ஒன்றுக்கு இரவு 3 சுற்றுகள் வீதம் இரவு 7 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரையில் கண்ணை ஜொலிக்கும் மின்னொளியில் நடைபெறுவது வழக்கம். மேலும் இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு தெப்பம் உருவாக்கப்படும் நிலையில் இதற்காக 432 டின் பேரல்களில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் வீதம் 2 அடுக்குகளாக 7 அடி உயரத்திலும் 2 ஆயிரத்து 500 சதுர அடி அகலத்திலும் சுமார் 400 பேர் அமர்ந்து செல்லும் வகையில் தெப்பம் உருவாக்கப்பட்டு தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டில் தெப்ப திருவிழா வரும் 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் தெப்பம் கட்டுமான பணிக்காக கடந்த 3ம் தேதி கமலாலய குளத்தின் கீழ்கரையில் அமைந்துள்ள தீர்த்த கட்டளை சுவாமி முன்பாக சிவாச்சாரியார்கள் மற்றும் கட்டுமான கொத்தனார்கள் மூலம் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தற்போது தெப்பம் கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருவதையொட்டி இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோயிலின் உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்தியாகராஜன், இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராமு, செயல் அலுவலர் அழகியமணாளன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 22ம் தேதி திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Thyagaraja Swamy Temple ,Thiruvarur ,Thyagaraja Swamy temple ,Tiruvarur ,Theppam festival ,Tiruvarur Thiagaraja Swamy Temple festival ,
× RELATED திருவாரூரில் பெய்து வரும் கனமழையால்,...