திருவாரூர், மே 8: திருவாரூர் நகரில் நிலத்தடி நீர் ம ட்டத்தை பாதுகாக்கும் வகையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 குளங்கள் ரூ 3 கோடி மதிப்பில் சீரமைக்க ப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநில முழுவதும் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 2021- 22ம் நிதியாண்டில் மட்டும் ரூ 2 ஆயிரம் கோடி அளவிற்கு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதன்பின்னரும் தொடர்ந்து 2 ஆண்டு காலமாக ரூ பல ஆயிரக்கணக்கான கோடியில் மாநிலம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி திருவாரூர் நகராட்சி பகுதியில் சாலைகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் போது ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் போன்றவை தூர்வாரப்படாத நிலையில் தற்போது திமுக ஆட்சி காலத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் முறையாக எவ்வித முறைகேடுமின்றி நடைபெற்றுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் வழக்கமான சாகுபடியை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் குளங்கள் தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் நடைபாதைகள் மற்றும் மின் விளக்குகள் வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவாரூர் நகரில் ஐ.பி கோயில் தெரு, வாசன் நகர் மற்றும் பிடாரி கோயில் தெரு என 3 இடங்களில் 3 குளங்கள் ரூ.3 கோடியே 5 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு 4 கரைகளிலும் மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு தமிழக முதல்வருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொது மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் திருவாரூரில் ₹3 கோடியில் 3 குளங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.