தஞ்சாவூர்,மே 8: கோடை வெயில் தாக்கத்திலிருந்து பறவையினங்களைக் காப்பாற்றி வாழ்வளிக்க ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் மேல்பகுதியில் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள் என பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வாட்ஸ் ஆப் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நீரின்றி அமையாது இவ்வுலகம் எண்ணும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப நீரை ஆதாரமாகக்கொண்டே உலகிலுள்ள அனைத்துயிர்களும் உயிர்வாழ்கின்றன. ஒரு மனிதனின் உடல் எடையில் பாதிக்கு மேல் நீர் உள்ளது தெரிந்ததே. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்ற பழமொழியும் நம் வழக்கத்தில் உள்ளது. தண்ணீரை ஆதாரமாகக்கொண்டே நாம் உயிர் வாழ்வதால்தான், வெளியில் சென்று களைத்து வீடுதிரும்பியதும் அவர்கள் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதை நாம் பண்பாடாகவும் கொண்டுள்ளோம்.
உயிர்வாழ்வதற்கு மனிதனுக்கு மட்டும் நீர் அவசியம் அல்ல. அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். 2 நாட்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லையெனில்கூட மான்கள் இறந்துவிடும். இதற்கு பறவையினங்களும் விதிவிலக்கல்ல. வீடுகட்டி குடும்பம் நடத்தி வந்த மனிதன், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும், நகர வளர்ச்சியாலும் அடுக்குமாடிகள் என்ற பெரியரில் கூடுகட்டி குடும்பம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் காடுகளாகவும், வயல்வெளிகளாகவும் இருந்த நிலப்பரப்புகள் இன்று தொழிற்சாலைகளாகவும், குடியிருப்புகளாகவும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாகவும் வேகமாக மாறி வருகின்றன. ஆற்றுப்படுகையில் குடில்கள் அமைத்து வாழ்க்கையைத் தொடங்கிய மனிதர்கள் இன்று தண்ணீருக்காக போராடி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமுதாய மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தால் மனிதர்களை விட பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது பறவையினம்.
ஆற்றோரங்களிலும், அழகிய காடுகளிலும், வயல்வெளிகளிலும் தனக்கான உணவையும் தண்ணீரையும் பெற்றுவந்த பறவையினங்கள், இப்போது கோடை வெய்யிலை சமாளிக்க முடியாமல் பல இடங்களில் செத்துக்கிடக்கின்றன. இதைத்தடுப்பதற்காகவும் பறவையினங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் பறவைகள் மீது அக்கறைகொண்ட ஆர்வலர்கள் செல்போன்களில் வாட்ஸ் ஆப் மூலம் பறவைகள் வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் செய்தியனுப்பி வருகின்றனர். அதில், “கோடை வெய்யில் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் வரண்டுபோய்க் கிடக்கின்றன. கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகரப் பகுதிகளில் வெப்பத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வதைப்போல், கோடையின் தாக்கத்திலிருந்து பறவையினங்களைக் காப்பாற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீடுகளின் மேல்பகுதி, மாடி, பால்கனி, முற்றத்தின் மேல்பகுதிகளில் பறவைகளுக்காக ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லது கப்பில் தயவுசெய்து தண்ணீர் வையுங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த குறுஞ்செய்தியை நீங்கள் உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கட்டாயம் அனுப்பிவையுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்படித்தாதவது ஒரு சிலர் முன்வந்து பறவைகள் மீது அக்கறை காட்டுவார்கள் என்று பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
The post கோடை வெயில் தாக்கத்திலிருந்து பறவையினங்களைக் காப்பாற்ற வாட்ஸ் ஆப் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு appeared first on Dinakaran.