×
Saravana Stores

ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் ஆஸ்துமா நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்: தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் பேட்டி

தஞ்சாவூர், மே8: ஆஸ்துமா நோயை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம் என தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் உலக ஆஸ்துமா தினத்தையொட்டி ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் நுரையீரல் மருத்துவத்துறை, பொது மருத்துவத் துறையின் மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர்கள் மனித சங்கிலியாக நின்று ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‌ அப்போது ஆஸ்துமா வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து ஒலிபெருக்கியில் வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: உலக ஆஸ்துமா தின விழாவை முன்னிட்டு பரிசோதனை முகாம், மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மாதத்திற்கு சுமார் 1500 வெளி நோயாளிகளுக்கு ஆஸ்துமா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்துமா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். ஆஸ்துமா என்பது குணப்படுத்தக்கூடிய நோய்தான். ஆனால் சிலரிடம் ஆஸ்துமா பற்றி தவறான புரிதல் உள்ளது. அவர்களுக்கு ஆஸ்துமா குறித்து போதிய விழிப்புணர்வு தேவை. தூசு, புகைப்பிடித்தல், கெமிக்கல் போன்றவற்றில் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும். மூச்சு விடுவதில் அடிக்கடி சிரமம் ஏற்பட்டால் அவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். பனிக்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் ஆஸ்துமா தாக்கும். நாம் தான் கவனமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஆஸ்துமாவுக்கு தற்போது பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். குறிப்பாக புகை பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  விழிப்புணர்வு முகாமில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், நுரையீரல் மருத்துவப்பிரிவு துறை தலைவர் அன்பானந்தன், பொது மருத்துவப் பிரிவு துறை தலைவர் கண்ணன், பதிவாளர் மணிமாறன், நுரையீரல் மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியர்கள் ராமசாமி, நடேஷ், கிருபானந்தம் மற்றும் துறை பேராசிரியர்கள்,உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள் , மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

The post ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் ஆஸ்துமா நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்: தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thanjavur Medical College Hospital ,Principal ,Balaji Nathan ,Thanjavur ,Principal Balaji Nathan ,World Asthma Day ,Pulmonary Department ,
× RELATED மலையேற்றத் திட்டம் மற்றும் இணைய வழி...