பவானி: சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.550 கோடி மதிப்பிலான 810 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், கொடிசியா அருகில் உள்ள தங்கம் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் 810 கிலோ தங்கக்கட்டிகளை வேனில் ஏற்றிக்கொண்டு, பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய சரக்கு வேன் சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர் சசிகுமார் ஓட்டிச்செல்ல, உடன் பாதுகாவலராக பால்ராஜ் என்பவர் சென்றார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சமத்துவபுரம் மேடு அருகே சென்றபோது பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது, வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரியின் மேல் மூடப்பட்டிருந்த தார்பாய் கழன்று, காற்றில் பறந்து வந்து சரக்கு வாகனத்தின் முன்பகுதியில் மூடிக்கொண்டதாக தெரிகிறது. இதனால், நிலை தடுமாறிய டிரைவர் சசிகுமார் இடது புறமாக திருப்பியபோது, வேன் சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், டிரைவர் சசிகுமார், பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, தங்க நகை நிறுவனம் மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சித்தோடு போலீசார், மீட்பு வாகன உதவியுடன் வேனை மீட்டு சித்தோடு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
அங்கு, ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, மாற்று வாகனத்தில் தங்கக்கட்டிகள் ஏற்றி அனுப்பப்பட்டது. வேனில் கொண்டு செல்லப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.550 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சரக்கு வாகனத்தில் நகைகள் எடுத்து செல்வதற்கு என்று வடிவமைக்கப்பட்ட லாக்கர் வசதி இருந்ததால் தங்கக்கட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.550 கோடி தங்கம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.