சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் செய்த சுற்றுலா பயணிகள் ரத்து செய்து வருகின்றனர். ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுப்பால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. நீலகிரி மாவட்டத்திற்கு இ-பாஸ் மூலம் எத்தனை வாகனங்கள் வேண்டுமானாலும் வரலாம். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். பதிவு மட்டும் செய்தால் போதும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்திருந்தார்.
அதன்படி, இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களை சோதனையிடவும், கண்காணிக்கவும் மாவட்ட எல்லையான கல்லாறு, குஞ்சப்பணை, கக்கநல்லா, தாளூர், நாடுகாணி உட்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் நேற்று காலை முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலான ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனால், மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சோதனை செய்த பின், இ-பாஸ் வைத்துள்ள வாகனங்களை மட்டும் நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் கல்லாறு பகுதியிலும், கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி சோதனை சாவடிகளிலும் இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் அனுமதிக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் கௌசிக், ஊட்டி ஆர்டிஓ, மகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இ-பாஸ் பெற்று ஊட்டி வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் குறைந்தே காணப்பட்டது.
இதனால், பெரும்பாலான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், நேற்று முன்தினம் ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் சுற்றுலா தலங்களில் குறைந்தளவே இருந்தது. ஊட்டிக்கு வருவதற்கு நேற்று முதல் இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஊட்டி வருவதற்கு பலரும் முன்னதாகவே புக்கிங் செய்திருந்த நிலையில் அவர்களில் பலர் புக்கிங் ரத்து செய்துள்ளனர். இதனால், பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
கொடைக்கானலிலும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்ததால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்க முயற்சி செய்வதால் அடிக்கடி epass.tnega.org இணையதளம் முடங்கி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைகின்றனர்.
உள்ளூர் வாகனங்களுக்கு இ பாஸ் பெறுவதிலும் குழப்பம் நீடித்து வருகிறது. இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது குறித்து தெரியாமல் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர். நேற்று காலை கேரள சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் எடுக்காமல் கொடைக்கானலுக்கு வந்தனர். அவர்களுக்கு சோதனை செய்யும் பணியாளர்கள் அந்த இடத்திலேயே இ-பாஸ் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து அனுமதித்தனர்.
இ-பாஸ் கட்டாயம் என்பது குறித்து விழிப்புணர்வை பரவலாக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக கோடை சீசன் விடுமுறை காலங்களில் கொடைக்கானலில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்காேனார் வருகை தருவது வழக்கம். ஆனால், நேற்று சுமார் 28,168 சுற்றுலாப்பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். இது வழக்கமாக வருவதை விட 25 சதவீதம் குறைவு என்றும், சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகை தடைபட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களுக்கு இ-பாசில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஊட்டி உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாசில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு பேருந்துகளில் வரும் சுற்றுலாபயணிகளுக்கு இ-பாசில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* யார் யாருக்கு எந்த கலரில் இ-பாஸ்
கொடைக்கானல், ஊட்டிக்கு வரும் சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாள கோடுடன் கூடிய இ-பாஸ் வழங்கப்படுகிறது. வேளாண் விளைபொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், சரக்குகளை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு நீல நிற கோடுகளுடன் கூடிய இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஊட்டியை சேர்ந்த பொதுமக்கள், வெளியூர் பதிவெண் கொண்ட வாகனத்தை பயன்படுத்தினால் பச்சை நிற இ-பாஸ் வழங்கப்படுகிறது.
* 7743 வாகனங்களுக்கு முதல் நாளில் இ-பாஸ்
கொடைக்கானலுக்கு செல்ல நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி, 15,945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு வாகனங்களில் வருவதற்காக விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளனர். இதன்மூலம் 3,61,919 பயணிகள் வருகை தரவுள்ளனர். நேற்று மட்டும் கொடைக்கானல் வருவதற்கு 3,792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன்மூலம் 28,168 பயணிகள் வந்துள்ளனர். இதேபோல் ஊட்டிக்கு இ-பாஸ் மூலம் நேற்று 3,951 வாகனங்களில் 18,259 சுற்றுலா பயணிகள் வந்தனர்.
* சோதனை சாவடிகளில் இ-பாஸ் எடுக்க உதவி மையம்
இ-பாஸ் இல்லாமல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு சோதனை சாவடிகளில் இ-பாஸ் எடுக்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி சோதனை சாவடிகளில் உதவி மையம் மூலம் இ-பாஸை எளிதாக சுற்றுலா பயணிகள் எடுத்து செல்கின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதி என்பதால் அனைத்து இடங்களிலும் செல்போன் சிக்னல் சீராக இருக்காது.
இந்த நிலையில், வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே இ-பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இணையத்திற்கான சிக்னல் சரிவர கிடைக்காமல் உள்ளது. இதனால் இ-பாஸ் பதிவிறக்கம் செய்யாமல் வந்தவர்களும், புதிய இ-பாஸ் விண்ணப்பிப்பவர்களுகம் சிரமமடைகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் இணைய சேவை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தினர். அதே நேரத்தில் இ-பாஸ் நடைமுறையால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து appeared first on Dinakaran.