- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- சென்னை
- சி.ரங்கராஜன்
- கே.ஆர்.ரங்கராஜன்
- கே.ஆர்.சண்முகம்
- தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.08 சதவீதம் முதல் 10.69 சதவீதம் வரை உயரும் எனவும், இந்திய சராசரி பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக நிகழ்வதாகவும் என, சி.ரங்கராஜன் மற்றும் கே.ஆர்.ரங்கராஜன் மற்றும் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு, 2030 ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் (ரூ.83 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கேற்ப துறை தோறும் முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், உள் கட்டமைப்பு மேம்பாடுகளை சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக, உலக முதலீட்டாளர் மாநாட்டை கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்தியது. 2 நாள் மாநாட்டிலேயே ரூ.6,64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26.9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுபோல் கடந்த பிப்ரவரியில் ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.3,440 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை இவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இதற்கேற்ப தமிழ்நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2024-25 நிதியாண்டில் 8.08 சதவீதம் முதல் 10.69 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் எகனாமிக்ஸ் தலைவர் மற்றும் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2023-24 நிதியாண்டில், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதம் முதல் 9.44% வரை இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியானது 7.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நாட்டின் சராசரியை விட வேகமான பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது இந்த ஆய்வறிக்கையின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
கடந்த 2006 -2011 கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு 10.3 சதவீதம் என்ற வலுவான பொருளாதார வளர்ச்சியை எட்டியது. பின்னர் 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இத 6.21 சதவீதமாக வீழ்ந்தது. இந்நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்தபோதிலும், தமிழ்நாடு இதர பெரிய மாநிலங்களவை விடவும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண முடிகிறது என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கம், வேலைவாய்ப்பு, கடன் கிடைப்பது, சமூக அளவீடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட மாநிலப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கியுள்ள இந்த ஆய்வறிக்கை, இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கான திறன் மாநிலத்திற்கு உள்ளது. 2021-22 முதல் 2022-23 வரை மாநிலத்தின் சராசரி ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு செயல்பாடுகள் மாநில முன்னேற்றத்துக்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது இந்த அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். முதலீடுகள், வேலை வாய்ப்புகள், உற்பத்தி திறன் அதிகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் வளர்ச்சியின் வேகத்தையும், நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானது. எனவே, வேறு பல புற காரணங்களால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மூலதனச் செலவினங்களை அதிகரித்தல், நிதி சலுகைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். 12வது நிதிக்குழு பரிந்துரைத்துரைத்தபடி, கடன் ஒருங்கிணைப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள், கடனைத் தள்ளுபடி செய்வதற்கான திட்டங்கள் குறித்து 16வது நிதிக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.
* பாதிப்புகளில் இருந்து விரைவான மீட்சி
கொரோனா தாக்கம், ரஷ்யா – உக்ரைன் போர், பண வீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரமும், மாநிலங்களின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு மாநிலம் மிக விரைவாக, முழுமையாக மீண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி சர்வதேச சந்தையில் ஸ்திரமற்ற தன்மை மற்றும் இந்திய அளவிலான வளர்ச்சியை விடவும் சிறப்பானதாகவும், நிலைத்தன்மை உடையதாகவும் உள்ளது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
* தனிநபர் வருவாய்
தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 2021-22ல் ஆண்டுக்கு ரூ.1.55 லட்சமாக இருந்தது. இது 2022-23ல் ரூ.1.67 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்திய சராசரியை விட இது முறையே 1.67 மடங்கு மற்றும் 1.69 மடங்காக அதிகரித்துள்ளது. மேற்கண்ட காலக்கட்டத்தில், அதாவது 2021-22ல் இந்திய அளவிலான தனிநபர் வருவாய் 2021-22ல் ரூ.92,583 ஆகவும், 2022-23ல் ரூ.98,374 ஆகவும் இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதை அறிய முடிகிறது. எனவே, கடந்த நிதியாண்டிலும் நடப்பு நிதியாண்டிலும் மாநில பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு எளிதில் சாத்தியமானதே என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
* அப்போதும்… இப்போதும்… எப்போதும் ஏற்றம்தான்
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2022-23 நிதியாண்டில் 8.19 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது. இது நாட்டின் வளர்ச்சியை விட வேகமானது என குறிப்பிடப்பட்டிருந்தது.
* நாட்டின் ஜிடிபியில் பங்களிப்பு
நாட்டின் ஜிடிபியில் தமிழக அரசின் பங்களிப்பு 2021-22ல் 8.82 சதவீதமாகவும், 2022-23ல் 8.68 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான ஒரு புள்ளி விவரத்தின்படி, தமிழ்நாட்டின் ஜிடிபி 2023-24ல் ரூ.28.3 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் இரண்டாவது பெரிய வளமான மாநிலம் என்ற அந்தஸ்தை இந்த மாநிலம் பெற்றிருக்கிறது. 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 14.6 சதவீத வளர்ச்சியாகும்.
* எம்எஸ்எம்இக்கள் மூலம்10 சதவீத பங்களிப்பு
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்களிப்பவை. இந்த வகையில் தமிழ்நாடு 22.32 லட்சம் எம்எஸ்இக்களுடன் சிறு குறு தொழில்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நாட்டில் 10 சதவீத பங்களிப்பை இது வழங்குகிறது என சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய சராசரி அளவை விட ஜெட்வேகத்தில் வளரும் தமிழ்நாடு பொருளாதாரம்: நடப்பு நிதியாண்டில் 10.69 சதவீதம் வரை அதிகரிக்கும், ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.