×
Saravana Stores

விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டின் டெல்டாப் பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும் தான் மும்முனை மின்சாரம் என்று இருந்த நிலையை மாற்றி, உழவர்களின் நலனை எப்பொழுதும் முதன்மையாக கருதக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021ல் பதவியேற்றது முதல், விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம், நாள் ஒன்றிற்கு 12 முதல் 16 மணி நேரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஒரு சில பகுதியில் உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதை முற்றிலுமாக நிவர்த்தி செய்து, அதிகப்படியான நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகளும், போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன.

தமிழ்நாட்டில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் இடர்களைக் களையும் பொருட்டு, ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ஜூலை 2021ல் வகுக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5,705 இடங்களில் உள்ள மின்மாற்றிகளில் மின்சுமை அதிகமாக உள்ளது எனவும் 3,200 இடங்களில் மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாகவும் மொத்தம் 8,905 இடங்களில் கண்டறியப்பட்டது.

இவற்றில் திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் மின்மாற்றிகளின் மின்சுமை அதிகமாகவும், குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாகவும் தெரிய வந்தது. குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்வதற்கு கூடுதலாக 3,200 புதிய மின்மாற்றிகள் நிறுவியதன் மூலம் தாழ்வழுத்த மின்பாதையின் நீளம் குறைந்து மின்னிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்பொழுது, கிராமப்புறங்கள் உட்பட கடைமுனை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க 24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய பிரத்யேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கடந்த 3 ஆண்டுகளாக, மின்சாரத்துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக, தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

The post விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Thangam ,Southern State Information ,CHENNAI ,Minister Thangam Tennarasu ,Minister of Electricity ,Thangam Thannarasu ,delta region of ,
× RELATED வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை...