சென்னை: சாதி வன்கொடுமையை தாண்டி பிளஸ் 2 தேர்வில் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த நாங்குநேரி மாணவர் சின்னதுரை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருநங்கை நிவேதாவும் சந்தித்து மருத்துவம் படிக்க வேண்டும் என தனது ஆசையை முதல்வரிடம் கூறியுள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த சென்னையை சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை ஆகிய இருவரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச்செயலர் சிவ்தாஸ்மீனா, பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின் திருநங்கை நிவேதா நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய திருநங்கைகளில் நான் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளேன்.
இது எனது சமுதாயத்தினர், எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். எந்த உதவியாக இருந்தாலும் செய்து தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தேன். அதற்காக தற்போது நீட் தேர்வு எழுதியுள்ளேன் என்றார். மாணவர் சின்னத்துரை கூறுகையில், சாதிய வன்முறையால் நான் தாக்கப்பட்டு மருத்துமனையில் இருந்த போது, முதல்வர் தான் எனக்கு தரமான சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சிகிச்சையில் இருக்கும் போதே தேர்வுகளை எழுதினேன். அதன் பிறகு, வேறு ஒரு பள்ளியில் என்னுடைய கல்வியை தொடர்ந்து பொதுத்தேர்வை எழுதி தற்போது 469 மதிப்பெண்களை எடுத்துள்ளேன். இன்றைய தினம் முதல்வரை நேரில் சந்தித்து அவரது வாழ்த்தை பெற்றுள்ளேன். எனக்கு உதவிய முதல்வருக்கும், பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை தாக்கிய மாணவர்கள் இனி அந்த தவறை செய்யக்கூடாது என விரும்புகிறேன். அடுத்தக்கட்டமாக பி.காம் முடித்து சி.ஏ படிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
The post சாதிய வன்கொடுமையை தாண்டி சாதனை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நாங்குநேரி மாணவர் வாழ்த்து: திருநங்கை நிவேதாவும் சந்தித்தார் appeared first on Dinakaran.