×
Saravana Stores

நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை: மவுனம் காக்கும் தேர்தல் ஆணையம்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருவதால், கடைசி கட்டமாக ஜூன் 1ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன், விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது. காரணம் பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று (7ம் தேதி) தொடங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன்மூலம், தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது.

The post நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை: மவுனம் காக்கும் தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Election Commission ,Chennai ,Vikravandi Constituency ,DMK ,MLA Bhujahendi ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய...