சென்னை: தமிழகத்தில் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கை:
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலத்துடன் பாஜ, பணபலத்துடன் அதிமுக வந்த போதிலும், அஞ்சாத சிங்கமாய்ச் சீறி எழுந்து, மக்களைச் சந்தித்து நமக்கு நாமே, ஒன்றிணைவோம் வா, தமிழகம் மீட்போம், மிஷண் 200, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், அதிமுகவை நிராகரிக்கிறோம், 16000 ஊராட்சி சபை கூட்டங்கள் எனும் ஒற்றைச் சொல் மந்திரங்களைக் கொண்டு திமுகவை வழிநடத்தி, மக்களைச் சந்தித்து, மக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை காக்க எழுந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் சென்றார் – வென்றார்.
தமிழ்நாட்டு, மக்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு 165 இடங்களை தந்து ஆட்சியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்கள். 2021 மே 7ம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி நிமிர்ந்த தலையுடன் உறுதிமொழிகள் ஏற்றுத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் முதல்வராக -அண்ணா, கலைஞருக்குப் பின் முதல்முறையாக தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின், நேரே கோட்டைக்குச் சென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி, விடியல் பயணத் திட்டம், கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.4,000 வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம் ஆகிய 5 கோப்புகளில் முதன்முதல் ஆணைகள் பிறப்பித்து, நிறைவேற்றி, சொன்னதைச் செய்வோம் செய்வதை சொல்வோம்” என்பதுடன், “சொல்லாததையும் செய்வோம்” எனக் கூறி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கினார்.
அதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது. இதனை ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனங்களே உறுதிப்படுத்தியுள்ளன. நிதி ஆயோக் நிறுவனம் தெரிவித்த ஏற்றுமதி ஆயத்த நிலைக்கான 2022ம் ஆண்டின் குறியீடுகள், உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்து தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளது.
நிதி ஆயோக் நிறுவனத்தின் நிலை ஆய்வு அறிக்கைகள் 80 முதல் 100 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்து தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்று கூறிப் பாராட்டியது. பொறியியல் சார்ந்த பொருட்களின் இறக்குமதி – ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022-23ம் ஆண்டிற்கான விவரங்களை ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டு, இந்திய நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்து பாராட்டியது.
அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் மற்றும் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில்; கர்ப்பிணி பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியது. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பீகார் 29.75 புள்ளிகளையும், உத்தரபிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்னும் உண்மையை பறைசாற்றியது.
ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். அதாவது 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு அரசை வெகுவாகப் பாராட்டியுள்ளது. குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளை பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதை புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-23ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை வெளியிட்ட ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என அறிவித்து ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர்; இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர். அடுத்து, இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலம் 4.378 பில்லியன் அமெரிக்க டாலர். மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரா 3.784 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
* ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதலிடம்.
2022-23ம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி – ஏற்றுமதி – வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர்.
இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்துப் பாராட்டப்பட்டுள்ளது. மராட்டியம், குஜராத் மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பெற்று தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கியத் துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. பா.ஜ. ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமல்லாமல், எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றியுள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடந்து இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இவைகள் அல்லாமல், கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள் படைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவற்றுள் முக்கியமானவை:
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1,000/- பெறுகின்றனர்.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
* புதுமைப் பெண் திட்டத்தில் 2,72,216 கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர்.
* விடியல் பயணம் திட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர்.
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
* இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
* மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 70 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு 12 லட்சம் குழுக்கள் பயன்
* விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு கூடுதலாக 2,99,384 ஏக்கரில் பயிர் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* ரூ.4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
* பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் காக்க 62,229 பயனாளிகளுக்கு ரூ.406.22 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
* 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 28,601 அரசுப் பள்ளி மாணவ மாணவியர் தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
* கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 150 யூனிட் என்பது 300 யூனிட் எனவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் என்பது 1000 யூனிட் எனவும் உயர்த்தி வழங்கப்பட்டு 2,38,163 நெசவாளர் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. முதல்வர் மு.கஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ள காலை உணவு திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது.
தெலங்கானா மாநிலத்திலும் இந்த காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே, தெலங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலை உணவுத் திட்டம் இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் 2.4.2024 அன்று “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்ற மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பின்பற்றி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேறு பல மாநிலங்களில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திட பரிசீலித்து வருகின்றன. இப்படி, தமிழ்நாடு முதல்வர் மூன்றாண்டுகளாக படைத்துவரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன.
இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைவர்களும் முதலமைச்சரின் திட்டங்களை அறிந்து வியந்து அவற்றை தத்தம் மாநிலங்களில் செயல்படுத்திடவும் முனைப்புடன் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவையெல்லாம் சாதனைச் சிகரங்கள் பல படைத்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகழை இந்த புவி என்றும் பாராட்டிக்கொண்டே இருக்கும். வாழ்க திராவிட நாயகர், வெல்க திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* நிதி ஆயோக் நிறுவனத்தின் நிலை ஆய்வு அறிக்கைகள் 80 முதல் 100 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்து தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்று கூறிப் பாராட்டியது.
* கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் மற்றும் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கை. கர்ப்பிணி பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியது.
The post திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சி, திமுக தலைமைக்கழகம் அறிக்கை appeared first on Dinakaran.